ஒரு சிறுகதை


முதலில் ஒரு சிறுகதையைத் தமிழில் மொழிபெயர்த்தால் என்ன என்று தோன்றியதால், இக்கதையை எழுதியிருக்கிறேன். ஆங்கில மூலம்: Fernando Sorrentino எழுதிய There's a Man in the Habit of Hitting Me on the Head with an Umbrella என்கிற சிறுகதையைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சி செய்துள்ளேன். பிழை இருந்தால் மன்னிக்கவும். எப்போதும் ஒருவன் என் தலையில் குடையால் அடித்துக்கொண்டே இருக்கிறான் ஒரு மனிதன் எப்போதும் என் தலையில் குடையால் அடித்துக்கொண்டே இருக்கிறான். அதனை 'அடி' என்றுகூட சொல்ல முடியாது. ஒரு குடையால் உங்கள் தலையில் லேசாகத் தட்டினால் எப்படியிருக்கும்? அது மாதிரிதான். ஆனால், விடாமல், நிறுத்தாமல்…! அவன் அப்படித் தட்ட ஆரம்பித்து இன்றைக்குச் சரியாக ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. முதலில் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லைதான். ஆனால் போகப் போகப் பழகிவிட்டது. அவன் பெயர் கூட எனக்குத் தெரியாது. எல்லோரும் போல சாதாரணத் தோற்றம் அவனுக்கு. நடுத்தர வயது. எதைப்பற்றியும் சஞ்சலமில்லாத சாந்தமான முகம். காதுகளின் அருகில் தலைமுடி இப்போதுதான் லேசாக நரைக்க ஆரம்பித்திருக்கிறது. மையினால் வரைந்தது போல மெலிதான மீசை. மாநிறம். அரைக்கை சட்டையும் தொளதொளவென்று ஒரு பேன்ட்டும் அணிந்திருக்கிறான். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் அவனைச் சந்தித்தேன். மாலை சுமார் 5 மணி இருக்கும். தீபாவளிக்காக ஷாப்பிங் முடித்துவிட்டு, மாம்பலம் ரயில் நிலையத்தில் கைநிறைய பைகளுடன் ரயிலுக்காக காத்துக்கொண்டிருந்தேன். யாரோ லேசாக என் தலையில் தட்டுவது போல இருந்தது. திரும்பிப் பார்த்தேன். அதே மனிதன். அன்றிலிருந்து, இன்று நான் இதை எழுதிக்கொண்டிருக்கிற இந்தக் கணத்தில் கூட என் பின்னால் நின்று கொண்டு ஒரு இயந்திரத்தைப் போல் மந்தமாக, ஆனால் உறுதியாகத் தன் குடையால் தட்டிக் கொண்டே இருக்கிறான். யாரோ ஒருவன் ரயில் நிலையத்தில் என் தலையில் அடிக்கிறான் என்றவுடன் என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. "யோவ் நீ என்ன பைத்தியமா?" என்று கொஞ்சம் சத்தமாகவே கேட்டேன். அவன் நான் சொன்னதைக் காதில் போட்டுகொள்ளாமல், தன் காரியமே கண்ணாக இருந்தான். போலீசிடம் புகார் செய்வதாகக் கூட பயமுறுத்திப் பார்த்தேன். ஊஹூம்! எதற்குமே அவன் மசியவில்லை. குடையால் தட்டுவதையும் நிறுத்தவில்லை. கொஞ்சம் ஆத்திர மிகுதியால் ஓங்கி அவன் முகத்தில் ஒரு குத்து விட்டேன். வலியால் முனகிக்கொண்டே அவன் கீழே விழுந்தான். ஆனால் விழுந்த வேகத்திலேயே மீண்டும் எழுந்து, ஒரு வார்த்தை கூட திருப்பிப் பேசாமல், மிகுந்த பிரயத்தனப்பட்டு தன் குடையைத் தூக்கி, முன்பு போலவே என் தலையில் தட்டத் தொடங்கினான். அவன் மூக்கில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. பார்க்கவே பரிதாபமாக இருந்தது. அவசரப்பட்டு விட்டோமோ என்று நினைத்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவன் என்னை ஓங்கி அடிக்கவில்லை. எனக்கு ஒரு வலியும் உண்டாக்கவில்லை. லேசாகத் தட்டிக் கொண்டுதான் இருந்தான். ஆனால் அவன் தட்டிக் கொண்டிருந்ததே ரொம்ப அசௌகரியமாக இருந்தது. உதாரணத்திற்கு, ஒரு ஈ உங்கள் நெற்றியில் வந்து உட்கார்ந்து கொண்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? எந்த வலியும் அதனால் இருக்காது. ஆனால் அந்த அசௌகரியத்தை உடனே விரட்டியாக வேண்டும் என்று செயல்படுவீர்கள் அல்லவா? அப்படித்தான் இருந்தது எனக்கும். அவனின் குடைத் தட்டல்கள், ஒரு ஈ மறுபடியும் மறுபடியும் வந்து என் நெற்றியில் உட்காருவது போல இருந்தது. இதற்குள், நிச்சயம் அவன் ஒரு பைத்தியமாகத் தான் இருக்க வேண்டும் என்று முடிவு பண்ணினேன். அங்கேயே இருந்து கொண்டு அவனை விரட்ட முயன்றால் பயனிருக்காது என்று ஓடத் தொடங்கினேன். (கல்லூரியில் படித்த போது, நான் ஒரு ஓட்டப்பந்தய வீரன் என்பதை நினைவில் கொள்க

). அவனும் என் பின்னால் ஓடி வந்து அடிக்கத் தொடங்கினான். நான் இதே போல் வேகமாக ஓடிக்கொண்டே இருந்தால் அவனும் ஓடி ஓடிக் களைத்து, சோர்ந்து விழுந்து இறந்து போய் விடுவானோ என்றெல்லாம் என் மனம் நினைத்தது. ஓடுவது எனக்கே சற்று பைத்தியக்காரத் தனமாகத் தோன்றியது. சட்டென்று ஓடுவதை நிறுத்தி, அவன் கண்களை நேருக்கு நேர் உற்றுப் பார்த்தேன். ஒரு கெட்ட எண்ணமோ, நிம்மதியோ, மகிழ்ச்சியோ, எதுவுமே அவன் முகத்தில் தெரியவில்லை. உணர்ச்சியில்லாமல், என் தலையில் தட்டுவதை மட்டும் நிறுத்தாமல் தொடர்ந்தான். போலீசிடம் புகார் செய்து விடலாமா என்று யோசித்தேன். போலீசிடம் சென்றால் என்னவென்று புகார் செய்வது? "சார், இந்த ஆள் விடாம குடையால என் தலையில தட்டிகிட்டே இருக்கான்" என்று சொல்வதா? அவர்கள் என்னை நம்புவார்களா? இதற்கு முன்னால் இது போன்ற புகாரை யாரேனும் கொடுத்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை. போலீசார் என்னையே சந்தேகிப்பார்கள். அவனுக்கு பதிலாக, என்னைப் பைத்தியம் என்று முடிவுகட்டுவார்கள். என்னைக் கைது பண்ணக் கூட வாய்ப்பு இருக்கிறது. போலீசிடம் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு, வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம் என்று முடிவு செய்தேன். 38-ஆம் நம்பர் பேருந்தில் ஏறினேன். அவனும் என்னைத் தலையில் தட்டிக் கொண்டே என்னைத் தொடர்ந்து பேருந்தில் ஏறினான். நான் முதல் ஸீட்டில் அமர்ந்தேன். அவன், என் அருகில் நின்றுகொண்டு ஒரு கையால் மேலே கம்பியைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் வைத்திருந்த குடையால், முன்பு போலவே என் தலையில் தட்டத் தொடங்கினான். பேருந்தில் என்னோடு பயணம் செய்தவர்கள் முதலில் தங்களுக்குள்ளேயே லேசாகச் சிரித்துக் கொண்டார்கள். பேருந்து ஓட்டுநர் எதிரில் இருந்த கண்ணாடி வழியாக என்னைப் பார்த்து சிரித்தார். நேரம் போகப் போக, அந்தப் பேருந்தே சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கியது. எல்லோரும் தங்களுக்குள் என்னைப் பற்றிக் குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள். நான் பேருந்தைவிட்டு என் நிறுத்தத்தில் இறங்கிய போது, பேருந்தில் இருந்த எல்லோரும் என்னையே திரும்பிப் பார்த்துக் 'கொள்'ளெனச் சிரிக்க, எனக்கு அவமானம் தாங்க முடையவில்லை. ஆனால் இதைப் பற்றியெல்லாம் கொஞ்சம் கூடக் கவலையில்லாமல் அவன் மட்டும் தன் வேலையை உறுதியாகத் தொடர்ந்தான். பேருந்தில் இருந்து இறங்கினேன். அல்ல அல்ல, இறங்கினோம். அவனும் என்னுடன் இறங்கிக் கொண்டான். என் தெருவில் நாங்கள் இருவரும் நடந்து சென்ற போது, எல்லோரும் அர்த்தமில்லாமல் எங்களையே வெறித்துப் பார்த்தார்கள். "என்னய்யா பார்க்றீங்க? இதுக்கு முன்னால ஒருத்தன் இன்னொருத்தன் தலையில குடையால அடிக்கிறத நீங்கள்ளாம் பார்த்ததே இல்லியா?" என்று கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால், அவர்கள் இப்படியொரு விஷயத்தைப் பார்த்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான் என்று பட்டது. தெருவில் நான்கைந்து வால் பையன்கள் எங்கள் பின்னால் 'ஓ'வென்று கூச்சல் போட்டுகொண்டே ஓடிவந்தார்கள். என் மனதில் நான் ஒரு திட்டம் தீட்டி இருந்தேன். வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்றதும், அவனை உள்ளே வர விடாமல் கதவை அவன் முகத்திற்கு நேரே மூடிவிட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவன் என் எண்ணங்களை முன்னமே அறிந்து வைத்திருந்தாற்போல், தாழ்ப்பாளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, என்னைத் தள்ளிவிட்டு உள்ளே வந்தான். அப்போது முதல், அவன் நிறுத்தாமல் தன் குடையால் என் தலையில் தட்டிக் கொண்டேதான் இருக்கிறான். எனக்குத் தெரிந்த வரைக்கும் அவன் சாப்பிடுவதில்லை, தூங்குவதில்லை. அவனின் ஒரே கடமை, என் தலையில் தட்டுவதுதான். நான் எங்கு சென்றாலும் என் கூடவே வருகிறான். எப்போதும் என் உடனேயே இருக்கிறான். என் அ

ந்தரங்க நடவடிக்கைகளில் கூட! முதலில் அவன் என் தலையில் தட்டிக் கொண்டே இருப்பதால் இரவில் என்னால் தூங்கவே முடிந்ததில்லை. ஆனால் இன்று, அவனின் குடை அடிகள் இல்லாமல் என்னால் தூங்கவே முடியாது போல் இருக்கிறது. இருந்தாலும், எங்கள் இருவருக்குள் இருந்த உறவு சுமூகமாக இருந்தது என்று சொல்ல முடியாது. நானும் பல சமயங்களில், பல விதங்களில் அவனிடம் கேட்டுப் பார்த்திருக்கிறேன் – அவன் ஏன் இப்ப்டியே தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறான் என்று. ஆனால் அதனால் எவ்விதப் பயனும் இல்லை. ஒரு வார்த்தை கூடப் பேசாமல், தன் வேலையை நிறுத்தாமல் தொடர்கிறான். பல தடவை அவனை அடித்திருக்கிறேன், அவன் முகத்தில் குத்தியிருக்கிறேன், அவனை உதைத்திருக்கிறேன், ஏன்? குடையால் கூட அடித்துப் பார்த்திருக்கிறேன். ஏதோ அடி வாங்குவதற்கே பிறந்தவன் போல என் எல்லா அடிகளையும் அவன் வாங்கிக் கொள்வான். அதுவும் அவன் கடமையின் ஒரு பகுதி போல் அமைதியாய் இருப்பான். இந்த விஷயம் தான் என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ஒரு அதீத நம்பிக்கையுடன், பக்தியுடன் அவன் தன் வேலையைத் தொடர்ந்தான். ஏதோ கண்ணுக்குத் தெரியாத தன் எஜமானன் சொன்னதைத் தட்டாமல் செய்கிற அடிமை போன்ற அவனின் நடவடிக்கைகள் எனக்கு விளங்கியதே இல்லை. அவன் சாப்பிடாமல் தூங்காமல் அதிசயப் பிறவியாக இருந்தாலும், நான் அடிக்கும் போது அவனுக்கு வலிக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. அவன் பலவீனமானவன் தான் என்பதும் எனக்கு விளங்குகிறது. ஒரே ஒரு துப்பாக்கித் தோட்டா இருந்தால் அவன் தொல்லையிலிருந்து தப்பி விடலாம் என்று எனக்குத் தெரியும். ஆனால் எனக்குப் புரியாத விஷயம், அந்தத் தோட்டாவால் அவனைக் கொல்வதா, அல்லது என்னையே சுட்டுத் தற்கொலை செய்துகொள்வதா என்பதுதான். நாங்கள் இருவரும் இறந்து போன பிறகு அவன் என் தலையில் தன் குடையால் அடிப்பதை நிறுத்திக் கொள்வானா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், இந்த சம்பாஷணைகள் தேவையற்றவை. துப்பாக்கியெடுத்து அவனையோ அல்லது என்னையோ நிச்சயம் என்னால் கொல்ல முடியாது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். மாறாக, இப்போதெல்லாம் எனக்கு ஒரு கவலை உருவாகியுள்ளது. அந்தப் பெயர் தெரியாத மனிதனின் குடை அடிகள் இல்லாமல் என்னால் உயிர் வாழவே முடியாது என்று தோன்றுகிறது. சமீப காலங்களில் அடிக்கடி எனக்கு ஒரு இனம்புரியாத அச்சம் ஏற்படுகிறது. ஒரு வேளை, எனக்கு மிகவும் அவசியமாகத் தேவைப் படுகிறபோது இந்த மனிதன் என்னோடு இல்லாமல் போய்விடுவானோ…? இத்தனை நாட்கள் இரவில் நான் நிம்மதியாகத் தூங்குவதற்கு உதவியாக இருந்த அவனின் குடை அடிகள் நிரந்தரமாக இல்லாமல் போய்விடுமோ…? பயமாக இருக்கிறது.

Advertisements

Published by

Deepak Venkatesan

Deepak is an engineer from Bangalore.

29 thoughts on “ஒரு சிறுகதை”

 1. I have not read the original version. But, your translation is very good. The story is also very good. reminded me Zen stories. Please keep up tranlating. Thanks and regards, PK Sivakumar

  Like

 2. நல்ல மொழிபெயர்ப்பு. வார்த்தைகள் இலகுவாய் வந்து விழுந்திருக்கின்றன. தொடர்ந்து மொழிபெயர்க்கவும், சிறுகதைகள் எழுதவும் வாழ்த்துக்கள்.

  Like

 3. இலகுவான வார்த்தைகளுடனான மொழிபெயர்ப்பு. மொழிபெயர்க்கப்படும் கதை இணையத்தில் இருந்தால் (இது சுலபமாகக் கிடைத்தது) அதற்கு இணைப்பும் கொடுத்தால் நன்றாயிருக்கும். Palermo park என்பதை மாம்பலமாக மாற்றியது இங்கே உறுத்தவில்லை – ஆனால் அசல் போலவே இருந்தாலும் நன்றாகத்தான் இருந்திருக்கும். தொடரட்டும் உங்கள் ஆர்வமும் படைப்புக்களும்.

  Like

 4. மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கின்றது. இதே கதை முன்னரும் தமிழாக்கப்பட்டிருக்கின்றது. எங்கே வாசித்தேன் என்று மறந்துவிட்டது. அல்லது, நீங்கள் எங்கேயாவது உங்கள் மொழிபெயர்ப்பினை அனுப்பியிருந்தீர்களா?

  Like

 5. இந்தக் கதையின் மொழிபெயர்ப்பு (சிறுகதைத் தொகுப்பு) என்னிடம் இருக்கின்றது. யார் மொழிபெயர்த்தார்கள் என்று தெரியவில்லை. பார்த்துவிட்டுத் தருகின்றேன். நான் ரசித்த வாசித்த ஒரு சிறுகதைத் தொகுப்பது.

  Like

 6. அச்சிறுகதையின் தமிழாக்கம் இணையத்தில் இருப்பின், முகவரி தந்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும் தமிழாக்கங்களின் தொகுப்பு இருப்பின் படிக்க interesting-ஆக இருக்கும்.

  Like

 7. சரளமான நடையில் எழுதியிருக்கிறீர்கள். வார்த்தைகள் அழகாக பொருந்தி வந்திருக்கின்றன. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

  Like

 8. தமுஎச இன் தென்னமெரிக்கச்சிறுகதைகளின் (ஸ்பனிஷிய சிறுகதைகளின்) மொழிபெயர்ப்பிலோ? “….. வீரவாள்” என்று நினைக்கிறேன். இன்றிரவு பார்த்துவிட்டு உறுதிப்படுத்துகிறேன்.

  Like

 9. மிக அருமையான மொழி பெயர்ப்பு!!! தொடர்ந்து செய்யுங்கள்!

  Like

 10. தீபு,
  மூலமே தமிழில் எழுதியதுபோல கதை மொழி மிகவும் சரளமாக இருக்கிறது. தொடருங்கள்.

  மாண்ட்ரீஸர், பெயரிலி,
  நீங்களெல்லாம் மொழிபெயர்ப்பாளர்கள். மாண்ட்ரீஸர் சுட்டிய ஆங்கில வடிவத்தையும் படித்தேன். தீபக் இன் வடிவத்தை மொழிபெயர்ப்பு என்பதா? தழுவல் என்பதா? (Of course, தீபக் பயன்படுத்திய ஆங்கில வடிவம் எப்படியிருக்கிறது என்பது தெரியாது)

  Like

 11. சுந்தரமூர்த்தி, மொழிபெயர்ப்பாளரா, ஆளை விடுங்கள். ஆனால், மாம்பலம் என்று களத்தினைமட்டும் மாற்றியதாலேமட்டும் தழுவல் ஆகாது. மொழிபெயர்ப்பு என்றே கொள்ளலாம். தழுவல் என்பது டூமாஸின் The Man in the Iron Mask இனை உத்தமபுத்திரனாக எடுத்து, “யாரடி நீ மோஹினி?” என்று பாடவிடுவது; மொழிபெயர்ப்பு என்பது, தமிழ்ப்படத்துக்கு ஒளியத்திலே அடாத துணைத்தலைப்பு கீழே ஓடவிடுவது (“ஏய்! அக்கா மகள் நீ எந்தன் சட்டைப்பாக்கட்டுக்குள்ளே” என்பதை “Oh! My sister’s daughter, you are in my shirt pockets” என்று பெயர்ப்பது). வெளியே சொல்லாமலே மாப்பசானைப் புதுமைப்பித்தனும் வோல்டர் ஸ்கொட்டின் ஐவன்கோவை பார்த்தீபன் கனவு சிவனடியாராகக் கல்கியும் போட்டுக்கொண்டால், அஃது இன்ஸ்பிரேஸன் எனும் ஊட்டச்சத்தாம் 😉

  Like

 12. காலச்சுவடு இதழ் 23 அக்டோபர்-டிசம்பர் 1998 இலே எம்.எஸ் (எம். சிவசுப்பிரமணியன்) இனாலே மொழிபெயர்க்கப்பட்டு “அவன் என்னைக் குடையால் அடித்துக்கொண்டேயிருக்கிறான்” என்ற தலைப்பின்கீழ் வந்திருக்கிறது.

  காலச்சுவட்டின் மொழிபெயர்ப்புக்கதைகள் கொண்ட “மௌனப்பனி ரகசியப்பனி” தொகுதியிலே இருக்கின்றது.

  Like

 13. தழுவலோ அல்லது மொழிபெயர்ப்போ எதோ ஒன்னு… மிக நல்லாயிருக்கு. அதை விட பின்னூட்டங்கள் மிக பயனுள்ளது. படிப்பாளிகள் மாண்ட்ரீஸரும், பெயரிலியும் புத்தகங்களின் விவரங்களை எடுத்து விட்டால் கேட்டுக் கொண்டே இருக்கலாம். உங்களின் அருமையான பதிவின் மூலம் பின்னூட்டமாக பல பேரின் நல்ல கருத்துக்களை உலாவ விட்டதிற்கும் மிக நன்றி தீபக்.

  Like

 14. பெயரிலி அவர்கள் கொடுத்த செய்திக்கு மிக்க நன்றி. காலச்சுவடில் படித்துத் தெரிந்து கொள்கிறேன். Pallermo Park என்று எழுதினால் கொஞ்சம் உறுத்துமோ என்று எண்ணினேன், அவ்வளவுதான். தழுவல் என்று சொல்வது அபத்தம். கதை பிடித்திருந்ததால் லீனியராக மொழிபெயர்த்தேன். பெயரிலி அவர்களின் உதாரணங்கள் அருமை.

  Like

 15. / அவ்வளவுதான். தழுவல் என்று சொல்வது அபத்தம்/
  //கேட்டது தப்புதான்.//
  பிள்ளையார் பிடிக்கப் பெருங்குரங்காகி விடும் போல இருக்கிறதே. சுந்தரமூர்த்தி வெங்கடேசனின் மொழிபெயர்ப்பினைக் குறைத்து மதிப்பிட்டேதும் தழுவலா, மொழிபெயர்ப்பா என்று கேட்கவில்லை என்றுதான் எனக்குப் பட்டது; படுகிறது. புரிதலிலே இடைவெளி விழுந்து அநாவசியமான உரசலாகப் போகிறது. 😦

  Like

 16. அய்யய்யோ, நான் வெறும் ஹாஸ்யத்திற்காகச் சொன்னேன். என்னை மன்னித்து விடுங்கள். இடைவெளி, உரசல் என்று எல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம். தழுவல் என்று சொல்லும் அளவிற்கு இல்லை. மொழிபெயர்த்தேன் அவ்வளவே. – இது தான் நான் சொல்ல நினைத்தது. திரு. சுந்தரமூர்த்தி அவர்களிடம் வேண்டுமானால் ஒருமுறை அவனை அனுப்புகிறேன். ஒரு நாள் மட்டும் அடி அனுபவித்து அனுப்பி விடும். 😀

  Like

 17. பெயரிலி, தீபு,
  நான் சும்மா ஒரு தமாஷ¤க்கு தான் அடிபோடச் சொல்லிக் கேட்டேன். ஒரு இளிக்கும் முகத்தை போட்டிருக்க வேண்டும் 🙂
  தீபு, எதற்கு குடைக்காரனை என்னிடம் அனுப்பி, அப்புறம் நீங்கள் உறக்கம் வராமல் அவதிப்பட வேண்டும். அவன் உங்களுடனேயே இருக்கட்டும் :-D. வேறேதேனும் கதை கைவசம் இருக்கிறதா?

  பெயரிலி,
  //பிள்ளையார் பிடிக்கப் பெருங்குரங்காகி விடும் போல இருக்கிறதே. //
  இப்படியாகிவிடுவது தானே தழுவல்?

  Like

 18. ஓஹோ அப்படியா? (இப்போது பார்த்தால், சண்டைக்காரர்கள் என்று நினைத்தவர்கள் சாட்சிக்காரனுக்குச் சேர்ந்தே சாத்திவிடுவார்கள் போல இருக்கிறது ;-))

  /பிள்ளையார் பிடிக்கப் பெருங்குரங்காகி விடும் போல இருக்கிறதே. /
  //இப்படியாகிவிடுவது தானே தழுவல்?//
  இதுவென்ன தழுவல்! சைவசித்தாந்தக்கழகப்பதிப்பகம் செகப்பிரியரின் நாடகங்களைப் பெயர்த்திருக்குமே அதுவல்லோ தழுவலென்ற தழுவல், எம்ஜிஆர், லதா, மஞ்சுளாவை இறுகக்க் க(ட்)டி(ப்)பிடி(த்தது)போல.!! 🙂

  Like

 19. //சைவசித்தாந்தக்கழகப்பதிப்பகம் செகப்பிரியரின் நாடகங்களைப் பெயர்த்திருக்குமே அதுவல்லோ தழுவலென்ற தழுவல்//

  மகிழ்ச்சியாக இருக்கும் நேரத்திலே எதற்கு செகப்பிரியரின் பெயரைச் சொல்லி சோகப்படுத்துகிறீர்?

  சோகத்துக்குக் காரணம்:
  கல்லூரித் தமிழ்ப் பாடமொன்றுக்கு நான் படித்த ஆண்டு இருக்கிற நாடகங்களையெல்லாம் விட்டுவிட்டு பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் “மனோன்மணீயம்” செய்யுள் நாடகத்தை வைத்திருந்தார்கள். கல்லூரியில் மொழிப்பாடங்கள் அவ்வளவு முக்கியமல்ல. அதாவது Class (GPA)ஐ கணிக்க மொழிப்பாட மதிப்பெண்களை கணக்கிலெடுப்பதில்லை. ஆகையால் 40 எண்கள் பெற அளவாக PKV(பரீட்சைக்குக் கட்டாயம் வரும்) என்று குறித்துக்கொண்டவற்றை மட்டுமே உருப்போட்டு மீதி நேரத்தை ஊர் சுற்றவோ, சினிமா பார்க்கவோ பயன்படுத்துவது. அப்படி எதிர்பார்த்தவற்றையெல்லாம் (சீவகனின் வீரவுரை, குடிலன் அளக்கும் நாஞ்சில் நாட்டு வளம், நடராஜன் நாங்கூழ் புழுவிடம் கதைப்பது, மனோன்மணியின் கனவு இப்படி) விட்டுவிட்டு பெயர் தெரியாத கேள்வித்தாள் தயாரித்த புலவர் “சுந்தரனாரின் மனோன்மணீய நாடகப் பாங்கினை செகப்பிரியரின் நாடகங்களோடு ஒப்பிட்டு நும் சொந்த நடையில் ஒரு கட்டுரை வரைக” என்று கேட்டு காலை வாரியிருந்தார்.

  சுந்தரனார் இயற்றிய மனோன்மணீயமும் லிட்டன் பிரபுவின் (Lord Lytton) ‘ரகசிய வழி’ (The Secret Way) என்கிற நாடகத்தின் தழுவல் தான்.

  Like

 20. மாண்ட்ரீஸர்,
  இந்த மனோன்மணீயம்-ரகசிய வழி சமாச்சாரம் மனோன்மணீயத்தின் முன்னுரையில் படித்தது. அதைப்பற்றி மேலே ஏதாவது விஷயம் சேகரிக்கலாம் என கூகுளில் லிட்டன் பிரபு, ரகசிய வழி என்று வார்த்தைகள் போட்டுத் தேடினால் ஒன்றும் உருப்படியாக தேறவில்லை, மனோன்மணீயத்துக்கும்-ரகசிய வழிக்கும் உள்ள தொடர்பைத் தவிர (http://www.indirakadambi.com/work.html). நீங்கள் குறிப்பிட்ட ஆசாமியும் அவர்தான் போலத் தெரிகிறது.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s