மீண்டும் ஒரு சிறுகதை


மீண்டும் ஒரு கதையை மொழிபெயர்க்கும் முயற்சி. Mike Krath எழுதிய A Most Ambitious Experiment என்கிற சிறுகதை. இந்த முறை கொஞ்சம் மாற்றி, கதைமாந்தரையும் தமிழ்ப்படுத்தியிருக்கிறேன். பிழையிருப்பின் மன்னிக்கவும். விளையாட்டு "கண்மணி, நான் சொல்றதை கவனமா கேட்டுக்க", என்று மதன் சொன்ன போதே தன் கணவன் எக்குத்தப்பாக ஏதோ செய்யப் போகிறான் என்பது புரிந்துவிட்டது கண்மணிக்கு. "ம்ம்ம்… உனக்கு எப்படி சொல்லிப் புரிய வெக்றது? இப்ப நான் ரொம்ப தூரத்துக்கு ஒரு பயணம் போகப் போறேன். பல வருஷம் உன்னால என்னைப் பார்க்க முடியாது. ஆனா நான் உன்னை வந்து பார்ப்பேன். என்ன?" மதன் சொன்னதைக் கேட்டால் எந்த சாமன்யனும் அவனை என்னமோ போல ஏற இறங்கப் பார்த்திருப்பான். ஆனால் கண்மணிக்கு இதெல்லாம் வாடிக்கையாகிவிட்டது. மிகச் சாதாரணமாகக் கேட்டாள், "அப்படி எங்க போறீங்க?" "எதிர்காலத்துக்கு" "என்ன….?" "ஆமாம் கண்மணி, நான் எதிர்காலத்துக்கு போகப் போறேன். உனக்கு இது அதிர்ச்சியா இருக்கலாம். நான் திரும்ப வரும் போது உனக்கு என் மேல கோபமா கூட இருக்கலாம். ஆனா கவலை படாதே. நான் இங்கிருந்து போன 5 நிமிஷத்துல திரும்பி வந்துடுவேன். சரியா?" "……" "ஒண்ணும் இல்லடி, நம்ம சீனு மாமா எறந்தப்ப அவர் சொத்துலருந்து நமக்கு அம்பது லட்சம் வந்துது இல்லியா, அதை எதுல இன்வெஸ்ட் பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கு. இப்போதைக்கு ஒரு பிளான் பண்ணி வச்சிருக்கேன். அது வொர்க் அவுட் ஆகுதான்னு பார்க்கணும். அதான் ஒரு 20 வருஷம் கழிச்சு என்ன ஆயிருக்குன்னு பார்க்கப் போறேன்", மதன் தொடர்ந்தான். கண்மணிக்கு இப்போது புரிந்துவிட்டது. என்னத்தான் மதன் ஒரு மாதிரியான ஆளாக இருந்தாலும்; தன் வீட்டுக் கொல்லைப்புற ஸ்டோர் ரூமில் மணிக்கணக்கில், ஏன், சில சமயம் நாள் கணக்கில் கூடக் கதவைத் தாழிட்டு ஆராய்ச்சி என்று சொல்லி ஏதோ செய்து கொண்டிருப்பவனாக இருந்தாலும், இப்போது அவன் சொல்வது அக்மார்க் பைத்தியக்காரத் தனமாகத் தோன்றியது. தூக்கக் கலக்கத்தில் (அல்லது ஆராய்ச்சி மயக்கத்தில்) ஏதோ உளறுகிறான் என்று நினைத்தாள். "சரிங்க… இன்னிக்கு என்ன சமைக்கட்டும்?", சாவகாசமாகக் கேட்டாள். "இப்போதைக்கு என்னை எதுவும் கேக்காத. ஒரு அஞ்சு நிமிஷம் பொறு. திரும்பி வந்து சொல்றேன்". மதன் வேகமாகத் தன் வீட்டுக் கொல்லைப் புறத்தை நோக்கி நடந்தான். எல்லம் ஒரே குழப்பமாக இருந்தது கண்மணிக்கு. 'சரி, என்னமோ செய்து தொலைக்கட்டும்', என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள். வீட்டில் தலைக்கு மேல் வேலை இருந்தது. சமையல் செய்ய வேண்டும், துணி துவைக்க வேண்டும், டிவியில் 'தாலி பாக்கிய'த்தில் தொடங்கி வரிசையாகப் பல ஸீரியல்கள் பார்க்க வேண்டும், இன்னும் என்னென்னவோ! எல்லா வேலையும் ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பதற்குள், மதன் சொன்ன விஷயத்தை மறந்தே போனாள். "எங்க போனாரு இவரு? ஸ்டோர் ரூம்க்குள்ள போய்ட்டார்னா வெளிய பூகம்பமே வந்தாலும் தலை காட்ட மாட்டார். சாப்பாடு வேற ஆறிப் போகுதே", என்று அங்கலாய்த்துக் கொண்டே கொல்லைப் புறத்தில் சென்று ஸ்டோர் ரூம் கதவைத் தட்டினாள். பதிலேதும் கிடைக்கவில்லை. மீண்டும் ஒரு முறை தட்டினாள். ஊஹூம். கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றாள். வசவசவென்று எலெக்ட்ரானிக் சாமான்கள் எங்கு பார்த்தாலும் கொட்டிக் கிடந்தன. ஏதேதோ விளக்குகள் எல்லாம் எறிந்துகொண்டிருந்தன. கருப்பு நிறத்தில் இருந்த ஒரு விஷயத்திலிருந்து பீப்… பீப்… என்ற சத்தம் விட்டு விட்டு ஒலித்துக் கொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் மதனைக் காணோம். வீட்டினுள் இருப்பானோ என்று எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தாள். எங்கேயும் மதன் இருக்கவில்லை. இதற்குள் இருட்டிவிட்டது.
எங்கேயோ வெளியில் சென்றிருக்க வேண்டும், வந்து விடுவார் என்று நினைத்தாள். மேசை மீது அவனுக்குச் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டுப் போய்ப் படுத்துக்கொண்டாள். காலையில் எழுந்து பார்த்த போது, அவள் ராத்திரி எடுத்து வைத்த சாப்பாடு, மேசை மீது அப்படியே இருந்தது. மதன் வரவேயில்லை. "மதன்…மதன்…", என்று உரக்கக் கத்திப் பார்த்தாள். பிரயோஜனமில்லை. ஒன்றும் புரியாமல் உள்ளே போய் சோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள். அதன் பின் மதன் வரவேயில்லை. கொஞ்ச நாள் கழித்து போலீசிடம் சென்றுப் புகார் செய்தாள். அவர்களிடம் நடந்ததைக் கூறினாள். போலீஸ் வந்தார்கள். விசாரித்தார்கள். வீட்டில் ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று சோதனையிட்டார்கள். ஏதும் பலனில்லை. மதன் எங்கு சென்றான் என்பது யாருக்குமே தெரியவில்லை. "உங்க கணவர் காணாமல் போறதுக்கு முன்னால ஏதாவது சொன்னாரா?" "அஞ்சு நிமிஷத்துல திரும்ப வந்துடுவேன்னு சொன்னாரு" அதன் பின் போலீஸும் சென்றுவிட்டார்கள். நாட்கள் கழிந்தன. அதன்பின் வாரங்கள், மாதங்கள்… மதன் திரும்பி வருவான் என்கிற நம்பிக்கையே போய்விட்டது கண்மணிக்கு. போலீஸும் தம் தேடுதலை நிறுத்திவிட்டார்கள். எந்தத் தடயமும் கிடைக்காததால் கண்மணியின் கணவன் அவளை விட்டு ஓடிப் போய்விட்டான் என்ற முடிவுக்கு வந்தார்கள். ஆறு மாதம் கழித்துக் கேஸை மூடிவிட்டார்கள். ஆண்டுகள் உருண்டோடின. கண்மணிக்கு ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை கிடைத்தது. முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருந்தன. கண்பார்வை மங்கத் தொடங்கியிருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டுத் தன் காலத்தைத் தள்ளினாள். தன்னைவிட்டு ஓடிப்போன கணவனின் மேல் அவளுக்கு ஆத்திரமும் வெறுப்பும் ஏகத்துக்கு வளர்ந்திருந்தது. தன் துர்பாக்கிய நிலைக்கு அவனே காரணம் என்று தினம் தினம் அவனை மனதிற்குள் திட்டித் தீர்த்தாள். மதன் காணாமல் போய் சரியாக இருபது வருடங்கள் ஆயிற்று. மாலை நேரம். இருட்டத் தொடங்கியிருந்தது. கண்மணி தன் வீட்டின் சமையல் அறை மேஜையில் அமர்ந்து காய்கறி நறுக்கிக் கொண்டிருந்தாள். பின்னால் கொல்லைப்புறத்தில் ஏதோ சத்தம் கேட்டது. யாரோ நடந்து வரும் காலடியோசை கேட்டது. யாரது இந்த நேரத்தில்? மெதுவாக எழுந்தாள். அதற்குள் அந்த சத்தம் தன் கொல்லைப்புறக் கதவை நோக்கி வருவதை உணர்ந்தாள். எச்சரிக்கையாக, கொல்லைப்புற ஜன்னலிலிருந்து எட்டிப் பார்த்தாள். அங்கே, அவள் கண்ணெதிரில் அவளின் கணவன் மதன்! அவளை விட்டுப் பிரிது சென்ற போது எப்படி இருந்தானோ, அப்படியே இருந்தான். இளமை மாறாமல்…! கண்மணி அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவள் வாயில் வார்த்தைகளே வரவில்லை. கொஞ்ச நேரத்தில் சமாளித்துக் கொண்டு, "நீங்களா…?", என்றாள். "சீனு மாமாவோட அந்த அம்பது லட்சம் என்ன ஆச்சு?", மதன் கேட்டான். "இத்தனை நாள் நீங்க எங்க போயிருந்தீங்க?" "அதெல்லாம் விடுடி. அந்த அம்பது லட்சம் என்ன ஆச்சு? அதச்சொல்லு மொதல்ல" "நல்லா இருக்கு நீங்க சொல்றது. இருபது வருஷத்துக்கு முன்னால என்னை நடுத்தெருவுல அம்போன்னு விட்டுட்டுப் போய்ட்டீங்க. இப்போ திடீர்னு திரும்பி வந்து அம்பது லட்சம் எங்கேன்னு கேக்றீங்க. நல்லா இருக்குங்க உங்க நியாயம்…" "ஓ, அப்ப நீ அதை மொத்தமா செலவு செஞ்சிட்டியா? க்ரேட். வெரி க்ரேட். கொஞ்சம் பொறு, இதோ வரேன்" மதன் மீண்டும் கொல்லைப்புற ஸ்டோர் ரூமினுள் ஓடினான். "மதன்…மதன்… எங்க போறீங்க…?", என்று கத்திக் கொண்டே கண்மணி அவன் பின்னால் ஓடினாள். அவள் ஸ்டோர் ரூமினுள் போய்ப் பார்த்த போது மதன் அங்கு இல்லை. மாயமாகிப் போயிருந்தான். கண்மணிக்கு எதுவுமே விளங்கவில்லை. மறுபடியும் சமையலறைக்குத் திரும்பினாள். என்ன நடந்தது என்பதை மீண்டும் மனதினுள் ஓட விட்டாள். எதுவு
் புரியவில்லை. எல்லாமே குழப்பமாக இருந்தது. அந்த ஐம்பது லட்சம் ரூபாய், மதன் முதலில் காணாமல் போன போது யாரும் சீண்டாமல் அப்படியே இருந்தது. ஆனால், இப்போது, அவள் மனதில் புதிதாக ஏதேதோ தோன்றத் தொடங்கியது. அந்த ஐம்பது லட்சத்தை மதன் ஒரு டிரஸ்டில் இன்வெஸ்ட் செய்திருந்தான். 20 ஆண்டுகள் ஆகும் வரைத் தன் கைக்கு அந்த பணம் கிடைக்காதபடி செய்திருந்தான். மதன் காணாமல் போய், ரொம்ப நாள் தேடியும் கிடைக்காமல் போகவே, போலீஸ், அவன் இறந்து போய் விட்டதாக முடிவு கட்டினார்கள். அதன் விளைவாக, 20 ஆண்டுகள் பொறுத்திருக்காமலேயே அந்த டிரஸ்ட் கண்மணி வசமானது. ஐம்பது லட்சம் அவளுக்கு உடனடியாகக் கிடைத்தது. அதன் பின்னால்… கொல்லைப் புறத்தில் மறுபடியும் சத்தம் கேட்டது. மீண்டும் அதே காலடியோசைகள். மீண்டும் ஒரு முறை மதன் அவள் முன் ஆஜரானான். நேராக சமையலறைக்கு வந்தான். "இப்ப சொல்லு, அந்த அம்பது லட்சம் என்ன ஆச்சு?" "நான் தான் சொன்னேனே, அது செலவாகிவிட்டது" "அது எப்படி முடியும்? நான் அதை ஒரு டிரஸ்டுல போட்டு வச்சிருந்தேனே…" "நீங்க சொல்றது சரிதான். ஆனா நீங்க எறந்து போய்ட்டதா முடிவு பண்ணி அந்த பணத்த என் கைலியே கொடுத்துட்டாங்க" "ஓ அப்படி ஆயிடுச்சா? ஒரு நிமிஷம் இரு" மதன் மீண்டும் மறைந்து போனான். கண்மணிக்குக் குழப்பம் இன்னும் அதிகமானது. 'நான் செலவு செஞ்சேனா? எதை செலவு செஞ்சேன்?', தன்னையே கேட்டுக் கொண்டாள். மதன் காணாமல் போன போது, பணத்துக்குத் தான் மிகவும் கஷ்டப்பட்டதை நினைத்துப் பார்த்தாள். மதனுக்கு ஏதோ சொத்து கிடைத்திருப்பதாகச் சொன்னானே என்று அதைத் தேடிப் போனதும், அதை அவன் எங்கோ மறைத்து வைத்திருப்பதாக வக்கீல் சொன்னதும் அவள் ஞாபகத்திற்கு வந்தன. ஆனால் எங்கு மறைத்து வைத்தான்…? அவள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே மதன் மீண்டும் தோன்றினான். சமையலறைக்கு வந்தான். "மதன், இந்த இருபது வருஷத்துல நான் எவ்ளோ கஷ்டப் பட்டேன் தெரியுமா உங்களுக்கு? சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாம நின்னேன்" "கவலை படாத கண்மணி. இதெல்லாமே ஒரு விளையாட்டு. ஒரு கனவு மாதிரின்னு வச்சிக்கோயேன். இன்னும் கொஞ்ச நேரம்தான். அப்றம் எல்லாமே உனக்கு விளங்கிடும்" "அது சரி… நீங்க பாட்டுக்கு காணாம போய்ட்டீங்களா!, ஏதாச்சும் காய்கறி நட்டுப் பொழைக்கலாமேன்னு கொல்லைப்பக்கம் பூரா தோண்டினேன். அப்பத்தான் அங்க புதைச்சி வச்சிருந்த தங்கக் காசு கிடைச்சது. அத வச்சித் தான்…" "அடிப்பாவி! அந்த காசை நீ கண்டுபிடிச்சிட்டியா?" "நீங்க என்ன சொல்றீங்க? ஓஹோ! அப்ப நீங்க தான் அதை அங்க புதைச்சி வச்சீங்களா? எப்படியோ, அந்தக் காசுல தான் ஒரு சின்ன வியாபாரம் ஆரம்பிச்சு, சௌகரியமா வாழ்ந்துண்டிருக்கேன்" மதன் எதுவும் சொல்லாமல் கொல்லைப்புறம் ஓடி மறைந்து போனான். அவன் திரும்ப வருவான் என்று எதிர்பார்த்து அவன் மனைவி காத்திருந்தாள். ஆனால், அவன் திரும்பவேயில்லை. அவனுக்காகக் காத்திருக்க மனமின்றி, அவள் எழுந்து போய்ப் பாதியில் விட்டு வந்த சமையல் வேலையைத் தொடர்ந்தாள். தன் கணவன் செய்த காரியத்தை நினைத்து அவளுக்குக் கோபம் வந்தது. 'அவர் வரட்டும். இன்னிக்கு இருக்குது அவருக்கு", என்று நினைத்துக் கொண்டாள். தான் ஏன் தன் கணவன் மீதுக் கோபம் கொள்ள வேண்டும்? அவன் தன்னை விட்டு ஓடிப் போனானா என்ன? இல்லையே! ஏதோ பிரமை என்று நினைத்துக் கொண்டாள். 'இப்பல்லாம் பட்டப் பகல்லியே கனாக் காண ஆரம்பிச்சிட்டேன்', – கண்மணி நினைத்துக் கொண்டாள். மதன் சாவகாசமாகச் சமையலறைக்குள் நடந்து வந்தான். "என்னங்க? இன்னிக்கி என்ன சமைக்க்ட்டும்? நீங்க சொன்னப்றம் தான் சமையலே ஆரம்பிக்கணும்" "எப்பப் பாரு சமையல் சமையல்! இதைத் தவிர ஒனக்கு ஒண்ணுமே தெரியாதா?"
"ஏங்க? இப்ப என்ன ஆயிடுச்சு?" "உன் கிட்டேருது ஒரு 20 வருஷம், நம்ம பணத்தைக் காப்பாத்தறதுக்குள்ளே, அப்பப்பா…" "என்னங்க… என்ன சொல்றீங்க?" "அல்ப காலம் 20 வருஷம். அது வரைக்கும் கூட உன்னால நம்ம காச செலவழிக்காம பாத்துக்க முடியாதாடி?" "என்னங்க என்னென்னமோ உளர்றீங்க? ஒரு அஞ்சு நிமிஷத்துல திரும்பி வரேன்னு சொல்லி போனீங்க. இப்ப திரும்பி வந்து, ஏதோ பணம், 20 வருஷம் அது இதுன்னு ஏகத்துக்கும் பொலம்ப்றீங்க… என்னங்க ஆச்சு உங்களுக்கு? ராத்திரி கண் முழிச்சி வேலை பாக்காதீங்கன்னா கேக்றீங்களா? வேண்ணா டாக்டர் கிட்ட போலாமா?", அக்கறையுடன் கேட்டாள் கண்மணி. மதன் தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான். இவளிடமிருந்து 20 லட்சத்தை எப்படிக் காப்பாற்றுவது என்று எண்ணினான். சட்டென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. இவளைக் கொன்றுவிட்டால் என்ன? இவளை இப்போதைகுக் கொன்றுவிட்டு, 20 வருடங்கள் முன்னோக்கிச் சென்று தன் 20 லட்சம் என்ன ஆகிறது என்று பார்க்கலாம்; பிறகு, ஒரு 5 நிமிடங்கள் முன்னால் திரும்பி, தன் மனைவியுடன் தன் வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று திட்டம் போட்டான். அருமையான திட்டம்! "கண்மணி, அந்த கைதுடைக்கிற துணி எங்க இருக்கு?" "இந்தாங்க" அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் அத்துணியை அவள் கழுத்தில் சுற்றி நெரிக்கத் தொடங்கினான். "கவலை படாத. இது ஒரு சின்ன விளையாட்டு, அவ்வளவுதான்", என்று கூறிக் கொண்டே துணியை இறுக்கினான். சற்று நேரத்தில் கண்மணி மடிந்து சாய்ந்தாள். மதன் கடகடவென்று கொல்லைப்புறம் போய் மறைந்தான். இருபது வருடங்கள் கடந்து தோன்றினான். மீண்டும் கொல்லையிலிருந்து வீட்டுக்கு ஓடி வந்தான். "யார்றா அது?", ஒரு அழுத்தமான ஆண்குரல் கேட்டது. அய்யோ! இதைப் பற்றி அவன் யோசிக்கவே இல்லையே. இப்போது என்ன செய்வது? எங்கேனும் ஒளிந்து கொள்ளலாமா என்று சுற்றிலும் இடம் தேடினான். டூ லேட். அந்த ஆள் கையில் துப்பாக்கி வைத்திருந்தான். "அசையாதே அங்கேயே நில்லு", – இது அந்த ஆளின் குரல். "அவசரப்பட்டு சுட்டுடாத. நான் சொல்றத கொஞ்சம் கேளு" காலம் கடந்துவிட்டது. அவன் சுட்டான். மதன் விழுந்து மடிந்தான். விளையாட்டு முடிந்தது.

Advertisements

Published by

Deepak Venkatesan

Deepak is an engineer from Bangalore.

3 thoughts on “மீண்டும் ஒரு சிறுகதை”

 1. ரொம்ப நல்லாருக்குதுங்க, அப்டீன்னு ஒரு உப்புச் சப்பில்லாத பின்னூட்டம் போட என்னால முடியல, இப்பல்லாம். ஏன்னா, சும்மா ஒரு பின்னூட்டம் போடவே எனக்கு, notepad-ல முரசு கொட்டி, அத வெட்டி, ஒட்டி… அப்டீன்னு ஒரு 5 நிமிஷம் ஆகுதே… ஆனா நீங்களோ, அலுக்காம, சளைக்காம, ஒரு english-கதைய படிச்சு, அதுல ஒங்களோட கற்பனை வளத்த கலந்து, முழு கதயையும் தமிழுல type-பண்ணி… இதுக்கெல்லாம் எவ்ளோ நேரம் ஆகுது.

  சில பேரு மாதிரி, எனக்கு இம்பூ..ட்டு நேரமகுது; நா..அப்டிதான் எழுதுவேன், இஷ்டம்னா படி; ICICI account நம்பர் தரேன், dollar போடுன்னு சொல்லாம free-ஆ கொடுக்கிறிங்க.

  இன்னும் எவ்ளவோ எழுதனும்னு தோனுது, ஆனா, என்ன செய்றது?
  எழுதுறதுக்குதான் நீங்க இருக்கீகல்ல, நானு ச்சும்மா வாசிக்கறதோட சரி. எப்பவாச்சும் இப்டி பின்னூட்டம், அவ்ளோதான்.

  வணக்கம்.

  Like

 2. அடேயப்பா! கவிஞர் வொர்ட்ஸ்வொர்த் அவர்களே (அப்படித்தானே தங்களை அழைக்க வேண்டும்?), தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. நான் என்னவோ மிகுந்த சிரமப்பட்டு எழுதியதாகச் சொல்லியிருப்பது தான் ஹாஸ்யம். பொழுதிருப்பதாலும், நல்ல கதை கிடைத்ததாலும் எழுதினேன் (கதையை யோசிக்கும் நேரம் கூட செலவிடத் தேவையில்லாமல்…).

  தீபக் 🙂

  Like

 3. Hi Deepak…

  Ur usage of words is really good… but sometimes it reminds me of Sujatha… but u have taken the whole story at good pace… really good.. Hats off…

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s