அது ஒரு அழகிய “புறா”க் காலம்


“உலகம் அழியப் போகுது சார்” என்று திடீரென்று எங்கிருந்தோ ஒருவர் உங்களிடம் வந்து சொன்னால் எப்படி இருக்கும்? சொன்னார். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில்! சொல்லிவிட்டு, ஏதோ சில மதப் பிரச்சார நோட்டீஸையும் கொடுத்துவிட்டு வேகமாக ஓடினார், அடுத்திருந்த பெண்மணியை நோக்கி! நூறு டிகிரி சுட்டெரித்த வெயிலையும் மீறின என் கோபத்தை அடக்கிக் கொண்டு அவரை லேசாக முறைத்துவிட்டு நகர்ந்தேன். பொதுவாக இது மாதிரி கண்ட இடத்திலெல்லாம் துண்டுப் பிரச்சார சீட்டுகளைக் கையில் கொடுத்து உபத்திரவிக்கும் நபர்கள், ஏதேனும் புத்தகம் ஒன்றை வைத்துப் படித்துக் கொண்டிருப்பவர்களை அண்டுவதில்லை. அன்று துரதிர்ஷ்டவசமாக என் கையில் இருந்த புத்தகத்தைப் படித்து முடித்து உள்ளே வைத்தேனோ, அடுத்த நிமிடம் என் கைகளில் பிரச்சாரச் சீட்டு! உலகத்தின் அழிவைப் பற்றிய உபதேசம் இலவச இணைப்பு! இந்த பேத்தல் சமாசாரங்களை எல்லாம் ஒரு மூலையில் கிடத்திவிட்டு, விஷயத்திற்கு வருவோம். இரண்டாம் உலகப் போர் காலத்தில் ஏவுகணைகளைச் சரியாக இலக்கு நோக்கிச் செலுத்துவதற்கு (guidance), புறாக்களைப் பயன்படுத்தும் முயற்சிகள் நடந்தன என்றால் நம்ப முடிகிறதா? பொதுவாக, உளவியல் நிபுணர்கள் பலரும் உள்மனம் தொடர்பான விஷயங்களையே அதிகம் ஆராய்ந்துள்ளனர். இதில், “என் வழி, தனீ வழி” என்று போன சிலரில் ஒருவர் தான் அமெரிக்க உளவியல் நிபுணர் பி. எஃப். ஸ்கின்னர் (B.F.Skinner). இந்த உள்மனம், ஸப் கான்ஷியஸ் – இதெல்லாம் உதவாத விஷயம், வெளிப்புற செயல்பாடுகள், நடத்தை – இவற்றை வைத்து ஆராய்ச்சி செய்தால் பல பயன்பாடுகள் கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை ஸ்கின்னருக்கு! மனிதர்களை நம்பிக் காரியத்தில் இறங்கினால் ஆவதற்கில்லை என்று இவர் பல புறாக்களை வாங்கி வைத்துக் கொண்டார். “பட்சி சாதி நீங்க, எங்க பகுத்தறிவாளரைப் பார்க்காதீங்க” என்று பாடி, அந்தப் புறாக்களின் அறிவுக் கண்ணைத் திறந்தாரா என்பதெல்லாம் தெரியாது – ஆனால், நிச்சயமாக, அப்புறாக்களைத் தன் காதலியிடம் தூது போ என்று அனுப்பவில்லை! இன்றைக்கு நாம் பயன்படுத்துகிறோமே, ரேடார், அது போன்ற ஒரு கருவியை இந்தப் புறாக்களை வைத்தே உருவாக்கினார். மூன்று புறாக்களை ஒரு திரையின் முன் அமர்த்தினார். இந்தத் திரையில், ஏவுகணை தாக்கி அழிக்க வேண்டிய இலக்கு தெரிகிறது. புறாக்கள் சாதாரணப் புறாக்கள் இல்லை – பழக்கப் பட்ட அதிரடிப் புறாக்கள்! திரையில் தெரியும் இலக்கை அலகால் சரியாகக் கொத்த வேண்டும். சரியாகக் கொத்தினால், எதிரே இருக்கும் சிறிய தட்டில், அப்புறாவிற்கு நெல் தானியம் கிடைக்கும். ‘கைல காசு, வாய்ல தோசை’ என்பது போன்ற விஷயம்! இந்தத் திரை, ஏவுகணை guidance உபகரணத்தோடு இணைக்கப் பட்டிருக்கும். மூன்று புறாக்களில் இரண்டு சரியாகக் கொத்தினால், ஏவுகணையின் இலக்கு சீர் செய்யப்படும். பிறகென்ன? புறா ரேடார் ரெடி! சுற்றியும் இரைச்சல், கலவரம் என்று என்ன நேர்ந்தாலும் இந்தப் புறாக்கள் தம் கடமையைத் தவறாமல் செய்யும். எந்த நடனமணி தேவதையும் இவற்றின் கவனத்தைச் சிதறடிக்க முடியாது. ஒருவேளை நடனமணிகளுக்குப் பதிலாக, அதிசுவையான நெல் மணிகளைக் கொண்டு சென்றால் அவை கவனம் பிசகலாம் – ஆனால் யாரும் அப்படிச் சோதித்தார்களா எனத் தெரியவில்லை! ரேடார் போன்ற அதிநவீன ட்ராக்கிங் கருவிகள் வந்துவிடவே, தேவயில்லாமல் புறாக்களை இம்சிப்பானேன் என்று இந்த முறை பயன்படுத்தப் படாமல் போயிருக்கிறது. கடலில் கப்பல் கவிழ்ந்து போய், நீரில் மிதந்து உயிருக்குப் போராடும் நபர்களைக் கண்டுபிடிக்கவும் இந்தப் புறாக்கள் பயன்பட்டன. கடல் நீலத்தில் ஒரு ஆரஞ்சு பொட்டு – அதாவது தத்தளிப்போரின் லைஃப் ஜாக்கெட் தெரிந்தால் போதும்

, இவை உடனே கொத்தி அடையாளம் காட்டும். மனிதனை விட இந்தப் புறாக்களின் பார்வை கூர்மையானது. இவைகளுக்கு அலுப்பு கிடையாது – கடலில் ஒரு மனிதனைக் கண்டுபிடித்துவிட்டு, ஒரு யுகம் கழிந்து தான் அடுத்த மனிதன் தெரிவான் என்றாலும், இவை அரட்டை அடித்துக் கோட்டை விடுவதில்லை. உஷாராக இருந்து காரியத்தைக் கச்சிதமாக முடிக்கும். இவற்றின் தேவையெல்லாம், கொஞ்சம் நெல் – அவ்வளவுதான். எனவே, இனி யாரும் புறாக்களிடம் வம்பு வைத்துக்கொள்ளாதீர்கள். எதிர்காலத்தில், அந்தப் புறா ஏதேனும் ஏவுகணைக்குள் ஒளிந்து வந்து உங்களைக் காட்டுத் தாக்கு தாக்கினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. புள்ளினங்களுக்குள் ஒரு வல்லினம்!

Advertisements

Published by

Deepak Venkatesan

Deepak is an engineer from Bangalore.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s