புதிரல்ல… புதிர்! (சிறுகதை)


ஆங்கில எழுத்தாளர் Oscar Wilde எழுதிய சிறுகதையான "The Sphinx without a Secret" என்பதைத் தழுவி இந்தச் சிறுகதையை எழுதியுள்ளேன். கதையை அப்படியே மொழிபெயர்க்காமல், நமது சூழல்களுக்கு ஏற்ற விதத்தில் தமிழ்ப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று பட்டதால், கதையை remake செய்தேன் எனலாம். இருப்பினும், கதைக் கரு, ஆஸ்கர் வைல்டினுடையது தான்.
* * * * *
அன்று மாலை, திநகர் கண்ணதாசன் சிலைக்கு எதிரே உள்ள தெருவில் நான் தைக்கக் கொடுத்த செருப்பை வாங்கப் போனேன். மண்டையைப் பிளக்கிற இந்த வெயிலிலிருந்து என்று தான் விடிவோ என்று பெருமூச்சு விட்டவனாய் திரும்பிய எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. எதிரில் கண்ணன் நின்றிருந்தான். கண்ணன் என்றால், என் குறைதீர்க்க வந்தப் பரந்தாமன் கண்ணன் இல்லை. இவன் என் பாலிய நண்பன். பள்ளி, கல்லூரி என்று தொடர்ந்து என் கூடவே படித்தவன். பத்து வருஷங்களுக்கு முன்னால் அவனைக் கல்லூரியில் பார்த்தது. "ஹாய்! வாட் எ சர்ப்ரைஸ்" என்று பளீர் புன்னகையோடு கைக்குலுக்கினேன். அவனும் கைக்குலுக்கிவிட்டு லேசாகச் சிரித்தான். சிரிப்பில் சுருதியில்லை. படபடவென்ற அவன் பேச்சும், கோல்கேட் சிரிப்பும் அவன் முகத்தில் எங்கேனும் மிச்சம் மீதி இருக்கிறதா என்று தேடினேன். ஊஹூம். "என்னடா டல்லா இருக்கே? ம்ம்ம்… உனக்கு கல்யாணமாயிடுச்சு, அதானே?" என்றேன், சற்று நக்கலாகவே… "என்னால இந்தப் பெண்களை புரிஞ்சிக்கவே முடியலடா" என்றான். "கண்ணா, என்ன, புதுசா philosophy படிக்றியா? ஓகே ஓகே, யார் அந்த பொண்ணு?" "இங்க ஒரே கூட்டமா இருக்கு… வேற எங்காவது போய் பேசலாமே" அடுத்த நிமிடம், ஆட்டோவில் நுங்கம்பாக்கம் நோக்கிப் பயணமானோம். "எங்கடா போலாம்? நீயே சொல்லு" – இது நான். "எங்கயாவது அமைதியா இருந்தா சரி" – கண்ணன். நுங்கம்பாக்கம் ஹை ரோடில், 'பரிஸ்தா'வில் கூட்டம் அதிகமாக இல்லை. ஆர்டர் செய்த சான்விச்சை மெல்ல கொரித்துக் கொண்டே கேட்டேன், "இப்ப சொல்லுடா". கண்ணன் கொஞ்சம் மௌனமாயிருந்தான். கண்களை மூடிக் கொண்டான். எதையோ யோசிப்பது போல இருந்தது. பிறகு, தன் கையில் வைத்திருந்த தோல்ப்பையிலிருந்து ஒரு நோட்டை எடுத்து என்னிடம் கொடுத்தான். மெல்ல அதைத் திறந்து பார்த்தேன். ஒரு பெண்ணின் படம். மன்னிக்கவும்… ஒரு அழகான பெண்ணின் படம்! 'அழகான' என்று சொல்லும் போதே, எல்லாம் அதில் ஐக்கியம். பெரிய கரிய கண்கள், நேர்த்தியான மூக்கு, சிவந்த உதடுகள் – ஒரு முறை பார்த்தாலே காதல் பண்ணலாம் என்று தோன்றியது. போதாக்குறைக்கு, ஒரு மெல்லிய, மிகமெல்லிய புன்னகை – அவள் உதடுகளில். "இவளைப் பத்தி நீ என்ன நினைக்கிற? இவள் நம்பகமானவளா தெரியறாளா?" பார்த்தவுடன் எதையும் சொல்லத் தோன்றவில்லை. எப்படி வேண்டுமாயினும் இருக்கலாம். அழகு என்றாலே ஆபத்து என்று யாரோ சொல்லியிருக்கிறார்களே… புன்னகை வேறு. இலக்கணப்படி பார்த்தால், அவளை நம்புவதும் கஷ்டமாகத்தான் இருந்தது… ஆனால்… "உன்னை தாண்டா கேக்கறேன்… இவளைப் பத்தி என்ன நினைக்கறே சொல்லு" "நீ கேக்றதே புதிராத்தான் இருக்கு. இவ கிட்ட இருக்கிற மோனாலிசா புன்னகை வேற… சரி, விஷயம் என்ன… புரியறா மாதிரி சொல்லு" வெய்ட்டர் வந்து தண்ணீர் ஊற்றிச் செல்லும் வரை அமைதியாய் இருந்தான். அதன் பின்னால் இந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினான். கதை உங்கள் பார்வைக்கு இதோ: ஒரு நாள் காலை நான் ஆஃபீஸ் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் வழியில், அடையாறு சிக்னலில் பச்சை விழுவதற்காக காத்திருந்தேன். டிஜிட்டலில் 85, 84, 83… என்று மிக மெதுவாக வினாடிகள் குறைந்து கொண்டிருந்ததால், சுற்று முற்றும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, பக
கத்தில் இருந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸிலிருந்து இவள் வேகமாக வெளியில் வந்தாள். சடாரென்று ஒரு ஆட்டோவைப் பிடித்தாள். சிக்னல் பச்சைக்கு மாறிவிடவே, ஆட்டோ கடகடவென ஓடி மறைந்தது. அதோடு அவளும் மறைந்தாள். அவளைப் பார்த்த நிமிடமே அவளிடம் எனக்கு ஒரு வகை ஈர்ப்பு உண்டாகியது. வீட்டுக்குப் போனேன். டிவி பார்த்தேன். அவள் நினைவுகள் மட்டும் அகலவேயில்லை. இரவெல்லாம் அவளையே நினைத்துக் கொண்டிருந்தேன். அதற்கு அடுத்த நாள் அவள் அடையாறு சிக்னலில் தென்படுகிறாளா என்று தேடினேன். அதன் மறுநாளும் தேடினேன். அவள் காணக் கிடைக்கவேயில்லை. அப்புறம் அவளை மறந்து போனேன். அடுத்த வாரம் என் நண்பன் ஒருவன் சவேராவில் பார்ட்டி என்று வரச்சொல்லியிருந்தான். போனேன். பார்ட்டியில் பாட்டு டான்ஸ் என்று அமர்க்களமாக இருந்தது. திடீரென்று…. என்ன ஆச்சரியம்! அடையாறில் பார்த்த அவள், பார்ட்டியில்! நண்பன் அவளை எனக்கு அறிமுகம் செய்தான். "மிஸ் மேகா. மிஸ் மேகா, திஸ் இஸ் கண்ணன்". லேசாகப் புன்னகைத்தாள். அவளின் மோனாலிஸா புன்னகை. "மேகா, நான் உங்களை ஒரு வாரம் முன்னால அடையாறு சிக்னல்ல பார்த்தேன்". அவள் கொஞ்சம் ஷாக் அடித்தது போல அதிர்ந்தாள். பின்னர், மிக மெல்லிய குரலில், "சத்தமா பேசாதீங்க. யாராவது கேட்டுட போறாங்க" என்றாள். ஒரு அழகான பெண்ணிடம் பேசப் போய் இப்படி அசட்டுத்தனமாக ஆனது எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. பிறகு, நிறைய பேசினோம். இல்லை இல்லை, பேசினேன். அவள் கொஞ்சமாக, அளந்து அளந்துப் பேசினாள். யாராவது கேட்டுவிடப் போகிறார்கள் என்ற அச்சத்துடன் பேசுவது போல இருந்தது. என்னவானாலும் சரி, இவளைக் காதல் பண்ணியே தீருவேன் என்று என் மனம் துள்ளியது. அவளைச் சுற்றியிருந்த அந்த மர்மம் கூட, அவள் மேலான மயக்கத்தை அதிகரிக்கத்தான் செய்தது. பார்ட்டி முடிந்து அவள் போகும் போது, "மேகா, நாம் மறுபடியும் எப்ப சந்திக்கலாம்?" என்றேன். அவள் சற்று தயங்கினாள். யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தாள். "நாளை மாலை 5 மணிக்கு இங்கேயே சந்திக்கலாம்" என்றாள். வேகமாய் மறைந்து போனாள். அடுத்த நாள் 4.45 மணிக்கே சவேரா போனேன். "இப்பத்தான் கெளம்பிப் போனாங்க" என்றான் வாட்ச்மேன். எனக்கு பலத்த ஏமாற்றமாக இருந்தது. நண்பனுக்கு டெலிஃபோன் செய்து அவள் அட்ரஸை வாங்கினேன். 'மேகா, உன்னைப் பின்னால் எப்போது சந்திப்பது?' என்று கேட்டு அவளுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதை அவளுக்குப் போஸ்ட் செய்தேன். இரண்டு வாரமாகியும் பதில் வரவில்லை. பிறகு, மேகா கொடுக்கச் சொன்னதாக என் நண்பன் எனக்கு ஒரு கடிதம் கொண்டு வந்து கொடுத்தான். பிரித்துப் படித்தேன். 'வரும் ஞாயிற்றுக் கிழமை வீட்டில் இருப்பேன், அப்போது சந்திக்கலாம்' என்று எழுதியிருந்தாள். அடியில், பின்குறிப்பு என்று போட்டு 'என் வீட்டிற்குக் கடிதம் எழுத வேண்டாம். விவரத்தை நேரில் சொல்கிறேன்' என்று எழுதப்பட்டிருந்தது. ஞாயிறு அன்று அவளைச் சந்தித்தேன். மிக எதார்த்தமாகப் பழகினாள். அவள் மீதான என் காதல் அதிகமாவது போல் தோன்றியது. அன்று நான் கிளம்பும் முன் மிக ரகசியமாக என் அருகில் வந்து சொன்னாள்: "அடுத்த முறை எனக்கு கடிதம் போடறப்ப, திருமதி இந்திரா, ரீடர்ஸ் பாயிண்ட், காலேஜ் ரோடு அப்டீங்கற அட்ரஸ்க்கு எழுதுங்க. சில பர்சனல் காரணத்துக்காக என் வீட்டுக்கு லெட்டர் போடாதீங்க ப்ளீஸ்" அதற்கப்புறம் அவளை நிறைய சந்தித்தேன். அவளின் மர்மமும் கூடவே ஒட்டிக்கொண்டு வந்தது. சில சமயம் அவள் வேறு யாருடனாவது தொடர்பு வைத்திருக்கிறாளா என்று நினைத்தேன். இருக்க முடியாது. அவளே மிகவும் ரிஸர்வ் டைப் போலத் தோன்றினாள். அவளின் மர்மத்திற்கு மோனாலிஸாவே தேவலாம் போலத் தோன்றியது. இறுதியாக ஒரு நாள
் முடிவு செய்து விட்டேன். அவளை நான் திருமணம் செய்துகொள்ளத் தீர்மானித்தேன். அவளிடம் இருந்த மர்மங்கள் என்னைத் தடுக்க முடியாது என்று உறுதியாயிருந்தேன். அவள் கொடுத்த முகவரிக்கு அன்று இரவே ஒரு கடிதம் எழுதினேன். 'என்னை திங்கள் கிழமை மாலை 6 மணிக்கு சந்திக்க முடியுமா?' என்று அக்கடிதத்தில் கேட்டிருந்தேன். 'சரி' என்று பதில் எழுதினாள். அன்று நான் தான் உலகத்திலேயே சந்தோஷமான ஆள் என்று தோன்றியது. அவளிடம் என்னமோ இருக்கிறது. அவளின் மர்மங்களைத் தாண்டியும் அவள்பால் ஈர்க்கப்படுவதாக எண்ணினேன். ஆனால் இப்போது யோசிக்கும் போது தோன்றுகிறது. நான் அவளை உண்மையாகவே காதலித்தேன். ஆனால், அவளது மர்மம்: அது மட்டும் என்னை வாட்டி எடுத்தது. ஏன் தான் இப்படி ஒரு போராட்டமோ… கடவுளே! "அப்ப அவளோட மர்மத்த நீ கண்டுபிடிச்சுட்டியா?" கண்ணனின் கதையில் ஐக்கியமாகிப் போன நான் கேட்டேன். "அதை நீதான் சொல்லணும்" என்றான். திங்கள்கிழமை. நான் மேகாவிடம் என் காதலைப் ப்ரொபோஸ் செய்யப் போகிற நாள். அன்று காலை முதலே நெர்வஸாக இருந்தேன். ஆஃபீஸுக்கு லீவ் சொல்லிவிட்டேன். மயிலாப்பூரில் இருக்கிற என் மாமாவைப் போய்ப் பார்த்தேன். திரும்புகையில், ட்ராஃபிக் ஜாமாகி இருந்தது. ஒரு சின்ன, மிகச் சின்ன சந்தில் நுழைந்தேன். எதிரில் திடீரென்று மேகா தோன்றினாள். தெருமுனையில் சென்றுகொண்டிருந்தாள். அவள் என்னைக் கவனிக்கவில்லை. மிகவும் ஜாக்கிரதையாக, எப்போதும் போல, எல்லா புறமும் பார்த்து, அந்தத் தெருக்கோடியில் இருந்த வீட்டினுள் நுழைந்தாள். "ஆஹா, இதுதான் உன் மர்மமா?" என்று என்னிடமே சொல்லிக்கொண்டேன். நேரே அந்த வீட்டை நோக்கிச் சென்றேன். ஏதோ தங்கும் விடுதி போல இருந்தது. கீழே பார்த்தேன். அவசரத்தில் அவள் தன் கைக்குட்டையை நழுவ விட்டதைக் கவனிக்காமல் உள்ளே போயிருந்தாள். அதை எடுத்து என் பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன். ஒரு நிமிடம் என்ன செய்வது என்று யோசித்தேன். சரி, அவளின் பர்ஸனல் விஷயத்தில் மூக்கை நுழைப்பானேன்… அவளிடம் நேராகவே கேட்டு விடலாம் என்று தீர்மானித்து அங்கிருந்து நகர்ந்தேன். மாலை 6 மணிக்கு அவள் வீட்டிற்குப் போனேன். சோஃபாவில் சாய்ந்திருந்தாள். அவள் அணிந்திருந்த ஒற்றைச் சரடு முத்துமாலை மங்கலான ஒளியில் மின்னியது. அவள் தேவதையாகத் தெரிந்தாள். "வாங்க கண்ணன், காலைலேர்ந்து எங்கயும் போகாம வீட்லியே இருந்தேன். ரொம்ப போரடிக்குது" என்றாள். ஒரு நிமிடம் அதிர்ந்து போனேன். மௌனமாய் அவளைப் பார்த்தேன். என் பாக்கெட்டிலிருந்த கைக்குட்டையை எடுத்து அவள் முன் வைத்தேன். "மேகா, இத நீ இனிக்கு காலையில மயிலாப்பூர்ல தவற விட்டுட்ட" என்றேன். அவள் ஷாக் அடித்து என்னைப் பார்த்தாள். அந்த கைக்குட்டை மேடை மேலேயே கிடந்தது. "அங்க நீ எதுக்கு போன?" என்றேன். "அதை கேக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?" "உன் கணவனாகப் போற உரிமை. நீ என்னை கலியாணம் பண்ணிக்றியானு கேக்கத் தான் வந்தேன்" அடுத்த வினாடி அவள் கண்களில் கண்ணீர். முகத்தை மூடிக்கொண்டு அழுதாள். "நீ என்கிட்ட சொல்லியே ஆகணும்" அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். என்னை நேரே பார்த்தாள். "மிஸ்டர் கண்ணன், உங்க கிட்ட சொல்றதுக்கு எதுவும் இல்ல" என்றாள். "நீ யாரையோ பார்க்கப் போயிருக்க. இது தான் இத்தனை நாளா நான் உன்னப்பத்தி தேடிட்டிருந்த மர்மம்" அவள் கன்னம் சிவப்பானது. "நான் யாரையும் பார்க்கப் போகலை" "நீ உண்மையே பேச மாட்டியா?" "உண்மை என்னன்னு சொல்லிட்டேன்" என்னால் கோபத்தை அடக்க முடியவில்லை. அவளை என்னென்னவோ சொல்லித் திட்டினேன். வேகமாக அங்கிருந்து என் வீட்டிற்கு வந்துவிட்டேன். அடுத்த நாள் அவள் எனக்கு ஒரு கடிதம் எழுதினாள். அதனை
் பிரித்துப் பார்க்காமலேயே திருப்பி அனுப்பிவிட்டேன். வேலை நிமித்தமாக பெங்களூர் போய் விட்டேன். ஒரு மாதம் கழித்துத் திரும்பினேன். நேரே மேகாவைப் பார்க்கப் போனேன். அவள் இறந்து போயிருந்தாள். திடீரென்று குளிர் ஜுரம் ஏற்பட்டு, நுரையீரல் பாதிக்கப்பட்டு இறந்து போனதாகச் சொன்னார்கள். நான் பைத்தியமாகிப் போனேன். உலகமே வெறுத்துப் போனது. அவளை அப்படி நேசித்தேனே… எல்லாம் கனவாகிப் போனதே என்று வருந்தினேன். கடவுளே, எல்லாவற்றையும் பிடுங்கி விட்டாயே என்று அழுதேன். "டேய் கண்ணா, நீ மயிலாப்பூர்ல அந்த மர்ம வீட்டுக்குப் போனியா இல்லியா?" – இது கதை கேட்டுக் கொண்டிருந்த நான். "போனேன்" மேகாவின் மர்மத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. என்னத்தான் ஆகிறது பார்க்கலாம் என்று ஒரு நாள் அந்த வீட்டுக்குப் போனேன். கதவைத் தட்டினேன். ஒரு வயதான அம்மாள் கதவைத் திறந்தாள். தங்குவதற்கு ஏதாவது ரூம் கிடைக்குமா என்று கேட்டேன். "ஒரு பெரிய ரூம் இருக்கு. அதில தங்கியிருந்த பொண்ணு மூணு மாசமா காணோம். வாடகை பாக்கியிருக்கு. நீங்க வேணும்ணா அந்த ரூமை எடுத்துக்கோங்களேன்" என்றாள். அவள் போட்டோவைக் காட்டிக் கேட்டேன், "இவ தான் அந்தப் பொண்ணா பாருங்க" "இவங்களே தான் சார், எப்ப வர்றாங்க இவங்க?" "இவ எறந்துட்டா" "ஓ, என்ன சார் ஆச்சு அவங்களுக்கு. அவங்கள என்னால புரிஞ்சிக்கவே முடிஞ்சதில்ல. வருவாங்க, ரூம்ல உக்கார்ந்து ஏதாச்சும் படிப்பாங்க, சும்மா அந்தரத்த பார்த்துட்டிருப்பாங்க, டீ சாப்பிடுவாங்க, அவ்வளவுதான்" "அவ இங்க யாரையாவது சந்திப்பாளா?" "அதெல்லாம் இல்ல சார். ரொம்ப நல்லவங்க. நிறைய பணம் கொடுப்பாங்க" அதன் பிறகு அவளிடம் என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவளிடம் ஐம்பது ரூபாய் கொடுத்துவிட்டு வந்துவிட்டேன். "இப்ப சொல்லு, இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? அந்த பொம்பள உண்மையச் சொல்றாளா இல்லை பொய் சொல்றாளா?" "உண்மையத்தான் சொல்றா" – இது நான். "அப்ப மேகா ஏன் அந்த விடுதிக்குப் போனா?" "கண்ணா, எனக்கு எல்லாம் தெரிஞ்சிடுச்சு. அந்தப் பொண்ணு மேகாவுக்கு மர்மங்கள் மேல ஒரு தனி பிரியம். பைத்தியம்னு கூட சொல்லலாம். தன்னை யாரோ ஃபாலோ பண்றதா கற்பனை பண்ணிண்டிருக்கா. மத்தவங்களையும் நம்ப வச்சிருக்கா. தான் ஏதோ ஒரு மர்மக் கதை ஹீரோயின்னு நெனச்சிண்டு இப்படி விடுதியில போய் உட்கார்ந்த்து தனக்குத் தானே ஒரு சஸ்பென்ஸ உண்டு பண்ணியிருக்கா. அதுல அவளுக்கு ஒரு திருப்தி. அவ்வளவுதான். அவகிட்ட வேற ஏதும் மர்மம் இருக்றதா எனக்கு தோணல" "நிஜமாவா?" "நிச்சயமா!" அவன் மீண்டும் அந்த நோட்டை எடுத்து அவள் முகத்தைப் பார்த்தான். அவள் இன்னும் விளங்காத புதிராக அவனைப் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.
* * * * *
Advertisements

Published by

Deepak Venkatesan

Deepak is an engineer from Bangalore.

One thought on “புதிரல்ல… புதிர்! (சிறுகதை)”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s