முதல் முறையாகப் பல விஷயங்கள்


எல்லோருக்கும் நேராக வைத்த மையை எனக்கு மட்டும் கோணலாக வைத்து விட்டார்களே என்று தேர்தல் மைய அதிகாரி மீது எனக்கு கொஞ்சம் கோபம் இருந்தது. அதிலும் என் என் நடுவிரலில் வேறு சிறு சிந்தல். அப்புறம், என் அலுவலக நண்பரின் விரலைப் பார்த்த பின்பு தான் எனக்கு ஆறுதல். அவர் கை முழுவதும் ஒரு மினி கோலமே போட்டுவிட்டிருந்தார்கள் தேர்தல் மைய அதிகாரிகள். முதல் முதலாக வாக்களித்ததில் மிகுந்த மகிழ்ச்சி ­– ஏதோ இந்தியாவிற்கே ஜனாதிபதி ஆகிவிட்டது போல. அலுவலகத்தில் நண்பர்கள் பலரும் முதல் முறையாக வாக்களிக்கிறவர்கள் என்பதால், எல்லாருக்குமே உற்சாகம். மே 8-ஆம் தேதி முழுக்க ஒரே கொண்டாட்டமாக இருந்தது. விரலை உயர்த்தி அவரவர் கையில் வாங்கிய மையைக் காட்டிப் பெருமைபட்டார்கள். கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்கும் டென்ஷன் இருக்கிறதோ இல்லையோ – எங்களுக்கு இருக்கிறது – நாளை ஆட்சி அமைக்கப் போவது யார் என்று. இந்த முறை முதல் முறையாகப் பிரச்சாரத்தில் தேர்தல் ஆணையத்தில் கை ஓங்கி இருந்தது தெளிவாகத் தெரிந்தது. எங்கள் தொகுதி பக்கமெல்லாம் மெகா சைஸில் வரையப்பட்டிருக்கும் தலவர்களின் படங்களை இம்முறை காண முடியவில்லை. சுவர்களில் டப்ல் கலரில் நான்கடி உயர எழுத்துகளில் வரையப் பட்டிருக்கும் ‘கலைஞர்’, ‘அம்மா’, ‘அய்யா’ போன்ற பெயர்களெல்லம் இந்த முறை எங்கேயும் இல்லை. கொடிகள், தோரணங்கள், பேனர்கள், விளம்பரப் பலகைகள் என்று எதுவுமே அதிகம் இல்லாமல் அமைதியான தேர்தல் நடந்ததற்குத் தேர்தல் ஆணையத்தைப் பாராட்ட வேண்டும். அதே போல், முதல் முறையாக தேர்தலில் ‘49-ஓ’ பற்றி நிறைய விளம்பரம் செய்யப்பட்டது. ஞாநி அவர்களின் படம் போட்ட PDF கோப்பு மின்னஞ்சலில் சர்குலேட் செய்யப்பட்டது. 49-ஓ பற்றி நிறைய விளக்கி, அதனைப் பயன்படுத்த வலியுறுத்தியிருந்தார்கள். ஆனால், அப்படி யாரும் 49-ஓ பயன்படுத்தியதாக சேதி இல்லை. 49-ஓ போட வேண்டும் என்று வாக்குச்சாவடிக்குப் போனவர்களைக் கூட அங்கிருந்த தேர்தல் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்று கேள்வி. அப்படி ஒரு பிரிவு இருப்பதாகத் தெரியவில்லை என்று கூட பலர் சொன்னதாக ஒரு மடல் கிடைத்தது. இந்த 49-ஓ எந்த அளவிற்குச் சாத்தியமானது? இல்லை உண்மையில் அப்படி ஒரு பிரிவு இருக்கிறதா? இருக்கிறது என்றால் தேர்தல் ஆணையம் பெயரளவுக்காவது அதைப் பயன்படுத்தும் வசதி செய்யாதிருப்பது ஏன்? – இப்படி பல கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டியுள்ளது. தேர்தலுக்கு சில நாட்கள் முன்பு வரை ‘லோக் பரித்ராணா’ என்று இந்தியத் தொழில்நுட்பக் கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி பற்றி நிறைய பேச்சு அடிபட்டது. அவர்கள் மூதல் முறையாக இத்தேர்தலில் போடியிடுகிறார்கள். நிறைய நண்பர்கள் அக்கட்சியில் overnight அதிரடியாக சேர்ந்தார்கள். வீட்டில் ஒருபோதும் துடைப்பத்தைத் தொட்டறியாத சில நண்பர்கள் அக்கட்சியின் சார்பில் தெருவைக் கூட்டி சுத்தம் செய்தார்கள் என்று கேள்விப்பட்டேன். 🙂 ஆனால் இக்கட்சி அத்துணைப் பெரிய நம்பிக்கை தருவதாக இல்லை. அவர்களின் நடவடிக்கைகளும் திருப்தியாக இல்லை. சில மாணவர்கள் பிட் நோட்டீஸ் அடித்து தெருக்களில் சுற்றினார்கள். இதுவரை வாக்களித்துப் பழக்கமில்லாத அறிவுஜீவிகள் சிலர் ஆதரவு தெரிவித்தார்கள். மென்பொருள் பொறியாளர்கள், மாணவர்கள் என்று ஒரு மிகக் குறுகிய வட்டத்துக்குள் அக்கட்சி அகப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். கட்சியில் சேருவதற்கு படித்தவர்களாக இருக்க வேண்டும் என்றார்கள், யாருக்குமே தெரியாமல் எங்கோ கூட்டம் நடத்தியதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்களின் கட்சியின் பெயர் கூடப் பலருக்குத் தெரியவில்லை. (ஒரு வேளை ஹிந்தி பெயர் தமிழகத்தில் எடுபடவில்லையோ?). மொத்தத்
ில், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதில் காட்டிய அவசரத்தைப் பொதுமக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்துகிற வேலைகளில் காட்டலாம். கொஞ்சம் மக்கள் மத்தியில் இறங்கிப் பணியாற்றினால் அவர்களின் நோக்கம் ஈடேற வாய்ப்புள்ளது. எப்படியோ இம்முறை தேர்தல் முடிந்து விட்டது. நாளை வாக்கு எண்ணிக்கை. சூரியன் பிரகாசமாக இருப்பது போல் தோன்றுகிறது. அள்ளி அள்ளி வீசப்பட்டிருக்கும் தேர்தல் வாக்குறுதிகள், இலவசங்கள் – இவற்றில் இருந்து இந்நாட்டை ஆண்டவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக்கொண்டே நானும் நாளைய முடிவுகளுக்காகக் காத்திருக்கிறேன்.

Published by

Deepak Venkatesan

Deepak is an engineer from Bangalore.

4 thoughts on “முதல் முறையாகப் பல விஷயங்கள்”

  1. 49ஓ பற்றி ஞாநி மட்டுமே பேசி வருகிறார்.மேலும் இது குறித்த விவாதங்கள் தேவை.நீங்கள் சொல்லும் கட்சி வெறுமனே மத்தியதர வர்க்க மனோபாவத்தை அடிப்படையாகக் கொண்டது.கூரிய அரசியல் பார்வை ஏதும் கிடையாது.இங்குள்ள சாதிய அரசியல் குறித்த தெளிவான பார்வை இல்லை.எனவே அதிகநாள் நீடிக்காது.

    Like

  2. 49ஓ பற்றி ஞாநி மட்டுமே பேசி வருகிறார்.மேலும் இது குறித்த விவாதங்கள் தேவை.நீங்கள் சொல்லும் கட்சி வெறுமனே மத்தியதர வர்க்க மனோபாவத்தை அடிப்படையாகக் கொண்டது.கூரிய அரசியல் பார்வை ஏதும் கிடையாது.இங்குள்ள சாதிய அரசியல் குறித்த தெளிவான பார்வை இல்லை.எனவே அதிகநாள் நீடிக்காது.

    Like

  3. சரியாகச் சொன்னீர்கள். இந்தப் புதிய கட்சியினர் பெரும்பாலானோர் ஏதோ படங்களில் வருகிறது போல் சாதனை செய்துவிடலாம் என்று ஒரு வேகத்தில் புறப்பட்ட கூட்டம் தான். அவர்கள் கொடுத்த தேர்தல் அறிக்கையும் மிகவும் பொதுவான விஷயங்களைத் தான் கொண்டுள்ளது. இவர்கள் முதலில் சமூகத்தைப் புரிந்து கொள்ளட்டும். படித்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக வக்களிக்குமாறு கேட்பது நியாமானதாக இல்லை.

    Like

Leave a comment