இந்தியாவைக் கலக்கப் போகும் ப்ரியா, நிஷா, நிலோஃபர்


அண்மைக் காலங்களில் திரைப்படங்களில் மட்டுமே கலக்கி வந்த ஹீரோயின்கள் பலர், இம்முறை தேர்தலில் கட்சிகளின் அமோக ஆதரவால், தமிழகமெங்கும் அரசியல் மேடைகளிலும் கலக்கியது செய்தி. ஆனால், இங்கே நான் குறிப்பிடுவது சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நடிகைகளைப் பற்றியல்ல… நிஜமாகவே சுழற்றியடிக்கும் சூறாவளிகளைப் பற்றி.

முதலில் அமெரிக்காவில் ‘காத்ரினா’ என்ற சூறாவளி தாக்கியது. அதன் பிறகு ‘ரீட்டா‘. அதே மூச்சோடு நம்மூரிலும் ‘மாலா‘, ‘ஃபனூஸ்’ என்று தன் பங்கிற்கு பெண் புயல்கள் சக்கைப் போடு போட்டன. இப்போது சீனாவில் பல பேரைக் கதிகலங்கச் செய்திருக்கும் ‘ச்சான்ச்சூ‘ என்ற சூறாவளி ஆணா பெண்ணா என்று தெரியவில்லை. ஒரு வேளை சீன தேசத்து சிம்ரனாக இருக்கலாம்.

‘அமெரிக்காவில் தான் அப்படிச் சூறாவளிகளுக்குப் பெயர் வைக்கிறார்கள் என்றால் நம்மூரிலும் மாலா – ஷீலா என்று பெயர் வைக்க வேண்டுமா?’ என்று நண்பர் கணேஷ் மாதிரி பலருக்கும் தோன்றியிருக்கும். இதனால், எனக்கு மூன்றாவது வீட்டில் வசிக்கிற மாலாவைப் பார்த்து யாரும் “சூறாவளி… சூறாவளி… சூறாவளி… நீதான்டி!” என்று உணர்ச்சிவசப்பட்டுப் பாடிவிட மாட்டார்களா? என்று கூட நினைத்திருக்கிறேன். ஆனால் இந்தச் சூறாவளிகளுக்குப் பின்னால் ஒரு ஃபிளாஷ்பேக்கே இருப்பது தெரியவந்தது.

பசிஃபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் போன்றவை பரப்பரவில் மிகப்பெரியவை என்பதால், ஒரே சமயத்தில் பல புயல் சின்னங்கள் அவற்றில் தோன்றக் கூடும். இவற்றில் ஒன்று வடக்கு நோக்கியும், ஒன்று மேற்கு நோக்கியும், ஒன்று கிழக்கு நோக்கியும் நகர்கிறது என்றால், சன் டீவியில் வானிலைச் செய்திகள் வாசிப்பதற்காகத் தோன்றும் பெண் எந்தப் புயலைப் எத்திசையில் நகர்கிறது என்று குழம்பிப் போகக் கூடும். கேட்கிற நாமும் எந்தப் புயலைப் பற்றிச் சொல்கிறார் என்று புரியாமல் விழிக்கலாம். இப்படிப்பட்ட அசௌகரியங்களைத் தீர்க்கவே புயல்களுக்குப் பெயர் வைக்க ஆரம்பித்தார்கள். இன்னும், இப்படிப் பெயர் வைப்பதால் வானிலை ஆய்வு மையங்களில் வெவேறு புயல்களைப் பற்றி communicate செய்வது எளிதாகிவிடுகிறது.

முதல் முதலாக போன நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆ̥ஸ்திரேலியாவில் வானிலை ஆய்வாளர் ஒருவர் தான் இப்படிப் பெயர் வைக்கும் பழக்கத்தை ஆரம்பித்திருக்கிறார். அந்த ஊரில் அவருக்குப் பிடிக்காத அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சூறாவளிகளுக்கு வைத்திருக்கிறார். நம்மூர் போல அங்கே தலைவர்களைப் ‘புரட்சிப் புயல்‘ என்று அழைக்காமல், புயலைத் ‘தலைவா’ என்று அழைக்கிறார்கள் போல… இதனால், “மன்னார்குடி மாடசாமி மேற்கு நோக்கி நகர்கிறார்”, “லல்லு பிரசாத்தால் பல கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது”, “செங்கல்பட்டு சிவாவின் தாக்கம் சென்னையில் குறைந்துவிட்டது” – என்பது போன்ற அறிவிப்புகள் செய்து, தம் மனதை அவர் திருப்திபடுத்திக் கொண்டிருக்கலாம். இரண்டாம் உலகப் போரின் போது பணியற்றிய வானிலை ஆய்வாளர்கள், அட்டகாசம் செய்யும் சூறாவளிகளுக்குத் தன் மனைவி அல்லது கேர்ள் ஃபிரண்டின் பெயரை வைத்து மகிழ்ந்தார்கள். இதன் பின்னால், அமெரிக்க அரசாங்கம் புயல்களுக்குப் பெயர் வைப்பதற்காக ஒரு லிஸ்டைத் தயாரித்தது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு புயலாக உருவாகும்போது, இந்த லிஸ்டில் உள்ள ஒவ்வொரு பெயராக வைகிறார்கள். அடுத்த ஆண்டு மீண்டும் இந்த லிஸ்ட் ரீசெட் செய்து, முதலிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது.

உலகின் பல்வேறு இடங்களில் தோன்றும் புயல்களுக்கு அங்கே அருகிலிருக்கும் நாடுகள் புயலின் பெயரை வழங்கி உதவி புரிகின்றன. இந்த மாதிரி உருவானது தான் ‘மாலா’, ‘ஃபனூஸ்’ என்ற புயல்கள். இந்த வரிசையில் ப்ரியா, நிலோஃபர், நிஷா என்று இன்னும் பல பெயர்கள் சூட்டப்படுவதற்காகக் காத்திருக்கின்றன. அமெரிக்காவிலும் ஜூலியா, பலோமா, மெலிஸா போன்ற புயல்கள் உண்டு. பெண் புயல்கள் மட்டும் தானா என்கிறீர்களா? இல்லை. ஆகாஷ், சாகர், தாஸ் என்று பல ஆண் புயல்களும் வரக் காத்திருக்கின்றன. சுழற்றியடித்து சேதம் விளைவிப்பதில் ஆண் பெண் என்ற பாகுபாடு இல்லை. சுழற்ச்சி முறையில் நம்மூருக்கு மாலா, ப்ரியா போன்ற புயல்கள் மீண்டும் மீண்டும் வரும் என்பதால் அவற்றின் ரசிகர்கள் மனம் தளரத் தேவையில்லை. ஒரு குறிப்பிட்ட புயலால் ஒரு நாடு மிகுந்த சேதங்களுக்கு ஆளாகிறது என்றால், அப்புயலுக்கு ‘ரிட்டயர்மென்ட்’ கொடுத்து விடலாம். அதன் பின்னால் அப்புயல் திரும்ப வராது. வேறு ‘இளம்புயலை’த் தேடிக்கொள்ள வேண்டியதுதான். எதிர்காலத்தில் நம் பெயர்களில் எல்லாம் கூடச் சூறாவளிகள் வரலாம். எல்லோரும் சேர்ந்து கலக்கலாம். இப்புயல்களுக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகலாம். கோயில்கள் கூடத் தோன்றலாம். ‘சுழற்றியடித்த சொப்னா திருக்கோயில்’, ‘அள்ளித் தெறித்த அல்ஃபோன்ஸா ஆலயம்’ என்றெல்லாம் பெயர்கள் கேள்விப்படலாம். ப்ரியாவும் நிஷாவும் நிலோஃபரும் தேர்தல் காலங்களில் மேடைகளில் கலக்கலாம். மந்திரி கூட ஆகலாம். இன்னும் என்னென்னவோ… அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா!

எப்படியோ… மூன்றாவது வீட்டு ‘மாலா’ ரிட்டயர் ஆகாமல் அடிக்கடி வந்துகொண்டிருந்தால் மகிழ்ச்சிதான்! நன்றி: நேஷனல் ஹரிக்கேன் சென்டர், விக்கிபீடியா

Published by

Deepak Venkatesan

Deepak is an engineer from Bangalore.

4 thoughts on “இந்தியாவைக் கலக்கப் போகும் ப்ரியா, நிஷா, நிலோஃபர்”

  1. நன்றாக எழுதுகிறீர்கள் தீபக்.. தாவரவியல், புவியியல் என்று பிளந்து கட்டுகிறீர்கள்!

    Like

  2. மிக்க நன்றி மணியன், ஆதிரை.

    நான் என்ன எழுதினேன்? எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். நான் எடுத்துக் கொடுத்தேன். copy, paste தான். இடையில் ஒரு ‘translate’ சேர்த்துக் கொள்ளலாம். ஹிஹி…

    Like

Leave a comment