நடைபோட்ட நாட்கள்

நிலப்பரப்பின் அடியில் எப்போதாவது அழுத்தம் அதிகமாகும் போது, பூமி லேசாகச் சிலிர்த்துக் கொள்வதுண்டு. அது பூகம்பமாக வெடித்து நம்மை ஒரு கை பார்த்துவிடுகிறது. அப்படி – எப்போதாவது சிலிர்த்துக் கொள்ளும் பூமி போல, எப்போதாவது சமயமும் சமாச்சாரமும் கிடைக்கிற போது தான் எழுதுவேன் போலும்… இருந்தாலும் இத்தனை நாளும் நான் எழுதுவதை நாலு பேருக்குச் சொல்லிக் கொள்ள உதவிய தமிழ்மணத்திற்கு என் நன்றிகள். எங்கிருந்தோ தள்ளிவிடப்பட்டு இங்கு வந்து விழுந்திருக்கிற (பாவம்) உங்களுக்கும் என் நன்றிகள். இனி விஷயத்திற்கு வருவோம்.

மிக நீண்ட காலமாக என்னுடைய நண்பர்களாக இருக்கிற பலரிடமும் ஒரு சர்வே நடத்தினேன். எத்தனைப் பேர் என்னுடைய மிக நீண்ட தூர நடைபயணத் துன்புறுத்தல்களுக்கு (torture) ஆளாகியிருக்கிறார்கள் என்று ஒரு ஆய்வு. பெரும்பாலும் எல்லாருமே ஆம் என்றார்கள். நடப்பது எனக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக என்னோடு வருகிற அப்பாவி நண்பர்களையும் நடக்கவிடுவது நியாயமில்லை தான். இருந்தாலும் என்னுடைய நண்பர்களாக இருப்பதால் நடந்து தொலைக்கிறார்கள். இரண்டாவது முறை என்னோடு வரும் போது சமாளித்துக் கொண்டு, எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள்.

முதன்முதலாக நான் நடக்கத் தொடங்கியது பத்தாம் வகுப்பு இறுதித்தேர்வு முடிந்த விடுமுறை நாட்களில். நடப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று யாரோ உசுப்பேற்றி விட்டதால், நானும் என் நண்பர்கள் கோஷ்டியும் (இரண்டு பேர்) காலை எழுந்து வாக்கிங் போவது என்று முடிவு செய்தோம். 5.05க்கு வந்தாலும் தொலைத்துவிடுவேன் என்று மிரட்டியதால், காலை 4.55க்கே நண்பர்கள் இருவரும் பயபக்தியுடன் (religiously) என் வீட்டில் ஆஜர். வாக்கிங் போவது என்ற காரணத்தை விட, காலை 5 மணிக்கு நம்மூர் எப்படி இருக்கிறது என்று வேடிக்கை பார்ப்பது தான் எங்கள் உண்மையான நோக்கம் என்பதை அப்போது யாராவது சொல்லியிருந்தால் அவர்களைப் பதம் பார்த்திருப்போம். இப்போது போல் அப்போதும் ‘கொளத்தூர், சென்னை-99’-இல் தான் நான் வசித்து வந்தேன் என்பதால், செங்குன்றம் நோக்கிச் செல்கிற NH5-இல் எங்கள் நடை பயணத்தைத் தொடங்கினோம். என் வீட்டிலிருந்து கொஞ்சம் தொலைவு போவதற்குள்ளாக இத்தனை அம்பேத்கார் சிலைகள் இருக்கின்றன என்பது எனக்கு அப்போது தான் தெரியும். இடையிடையே பல வண்ணப் பூச்சுகளில் எம்.ஜி.ஆர். சிலைகள். சில மார்பளவு… சில முழு உருவம். சிலைகளையும், செம்மண் புழுதியில் திளைத்த கம்பெனி கதவுகளையும் பார்த்துக் கொண்டே சென்றதால் தூரம் தெரியவில்லை.

10 கி.மீ. நடந்து செங்குன்றம் வந்துவிட்டோம். (பிரபலமாக ‘ரெட்ஹில்ஸ்’ என்பார்கள்). ரெட்ஹில்ஸ் வந்துவிட்டது என்று பார்த்ததும் தான் எல்லோரையும் களைப்பு தொற்றிக்கொண்டது. இனி நடக்கமுடியாது என்று முடிவு செய்து, ரெட்ஹில்ஸ் பேருந்து நிலையத்தில் எல்லோரும் உட்கார்ந்து விட்டோம். பேருந்தில் செல்லலாம் என்றால், கையில் பைசா இல்லை. என்ன செய்வது என்று விழித்துக் (முழித்து) கொண்டிருந்த போது, யாரோ ஒருவர் வந்தார். அந்த காலத்தில் (8 ஆண்டுகள் முன்பு) டாஸ்மாக் இல்லை என்பதால், கல்யாணி ஒயின்ஸில் காலையிலேயே குவாட்டர் அடித்து ஸ்டெடியாக இருந்தார் நபர். ஏனோ, எங்களுடன் பேச்சு கொடுத்து, எங்களுக்கு டிக்கெட்டும் எடுத்துக் கொடுத்தார். PP242 ஏறி வீடு வந்து சேர்ந்தோம். அதன் பின்னால், ஒரு மாதத்திற்கு அந்த நண்பர்கள் என் வீட்டின் பக்கம் வந்ததாக நினைவில்லை. இப்படித் தான் நடக்க வைத்தே நான் பலரையும் டார்ச்சர் செய்ய ஆரம்பித்தேன்.

திடீரென்று ஒரு நாள், மியூஸியத்தில் இருக்கும் பழைய காலத்து சமாச்சாரங்களைப் பார்க்க வேண்டும் என்று எனக்கும் என் நண்பனுக்கும் ஆசை வந்த, எழும்பூர் அருங்காட்சியகம் சென்றோம். என்னோடு வரும் யாரையும் நடக்கச் செய்யாமல் விடுவதில்லை என்று உறுதியேற்றிருந்ததால், ஸ்பென்ஸரிலிருந்து மியூஸியம் வரை என் நண்பனோடு நடந்தேன். இல்லை இல்லை… நான் நடக்க, பாவப்பட்ட என் நண்பனும் என்னோடு ஒட்டி நடந்து வந்தான். பின்னர், மியூஸியத்தில் அவனின் குடையைத் தொலைத்து, அங்கே நெற்றி நிறைய சந்தனம் வைத்திருந்த செக்யூரிட்டியோடு 1 மணி நேரம் சண்டை போட்டது வேறு கதை.

தி.நகரிலிருந்து நுங்கம்பாக்கத்திற்கும், பின் திரும்ப தி.நகருக்கும் நான் பல முறை நடந்திருக்கிறேன். நல்ல வேளையாக, அப்போது என் நண்பர்கள் யாரும் என்னோடு மாட்டிக் கொள்ளவில்லை. என் நண்பனின் வீட்டிற்கு நடைபயணமாகச் செல்லும் போதெல்லாம், பாவம் பையன் கால்கடுக்க நடந்து வருகிறான் என்று, என் நண்பனின் அம்மா எனக்கு ஜூஸ் கலந்து கொடுப்பார்கள் என்பதாலேயே அவன் வீட்டிற்குப் பல முறை விஜயம் செய்திருக்கிறேன்.

இத்தனை நடந்தும் இளைத்தேனா என்றால், NEVER! ஏனோ தெரியலை, இரண்டு மூன்று சுற்று பெருத்தேன். எத்தனை சாப்பிட்டாலும் உடம்பு ஏறவே மாட்டேங்குது என்று என்னிடம் சொல்கிறவர்களைப் பார்த்தால் எனக்கு ஏகப் பொறாமை. வேலைக்கு சேர்ந்து ‘டிஸ்கவர்’ வாங்கியதிலிருந்து எனது நடை பயணங்கள் மிகவும் குறைந்து விட்டன. காலையில் எழுந்து வாக்கிங் போக வேண்டும் என்று ஒவ்வொரு ஒன்றாம் தேதியும் சபதம் எடுப்பது தொடர்கதை. இருந்தாலும் இப்போதும் தனியாக, யாருமில்லாமல் நான்கைந்து கி.மீ. நடப்பதற்கு வாய்ப்பும் அவகாசமும் கிடைத்தால், அதுவே அன்றைய நாளின் பிராப்தம், எனக்கு.

Advertisements
Post a comment or leave a trackback: Trackback URL.

Comments

 • பத்மகிஷோர்  On October 18, 2006 at 10:46 am

  புதிய யு.ஆர்.எல் ற்கு பால்கய்ச்சி குடிவந்தற்க்கு வாழ்த்துக்கள்.
  நல்ல நடை (எழுத்து நடையை சொல்கிறேன்) , ஜஸ்ட் 10 கீமி நடந்துவிட்டு மராத்தான் ஓடிய மாதிரி இப்படி ஒரு அயர்ச்சி ஏன்? 🙂

 • தீபக்  On October 19, 2006 at 7:00 am

  ஹி…ஹி… மிக்க நன்றி கிஷோர். சென்னையில் உச்சி வெயிலில் 10கி.மீ நடப்பதும் மராத்தான் ஓடுவதும் ஒன்று தான். அதுவும் எனக்கு! 😉

 • மதி கந்தசாமி  On October 28, 2006 at 11:29 pm

  நடப்பது எனக்கு ரொம்பவும் பிடித்தமான விஷயம். இங்க ஒன்றிரண்டு எழுதலாம்னு யோசிச்சேன். ஆனால், ஒரு இடுகை எழுதலாம்கிற யோசனை வந்திட்டதால, அதைச் செய்யப்போறேன். எழுதும்போது, உங்களுக்குச் சொல்றேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: