சென்னை மழைச் சுற்றுலா


சென்னையில் அழகான மழை! மழை என்றாலே சென்னை மிகவும் சுவாரஸ்யமாகி விடுகிறது. தெருவெல்லாம் கண்ணாடிகளாகி விடுகின்றன. கொஞ்சமாக பைக் சறுக்குகிறது. எல்லோரும் நத்தைகள் போல நின்று நின்று கவனமாக சாலைகளில் செல்கிறார்கள். குடைகள் இல்லாதவர்கள் தெருவில் ஓட்டம் பிடிக்கிறார்கள். தொப்பலாக நனைந்தும், வீரமாக வண்டியோட்டி வருபவர்களும் இருக்கிறார்கள். கார்களில் விருட்டெனப் பாய்ந்துகொண்டிருந்தவர்கள், இப்போது கார்களைச் செலுத்திக்கொண்டு, முன்னால் அதீத ஜாக்கிரதையுடன் செல்கிற சைக்கிள்காரனைப் பின்தொடர்ந்து, மெதுவாக மெதுவாக பவனிவருகிறார்கள். ஆட்டோக்கள் ‘நானே ராஜா’ என்று பாகுபாடில்லாமல் எல்லோர் மீதும் தண்ணீரை வாரியிறைத்து ‘ட்டப்பட்ட ட்டப்பட்ட’ என்று மோட்டார் புகை கக்க முன்னேறிச் செல்கிறார்கள். மஞ்சள், சிகப்பு, நீலம், கறுப்பு என்று கலர்கலராக ‘ஜெர்க்கின்’கள் அணிந்தவர்கள் பைக்குகளில் ஹீரோக்களாக பவனி வருகிறார்கள்.

இந்த சுவாரஸ்யமான (interesting) காட்சிகளெல்லாம் மழை வந்தால்தானே பார்க்க முடிகிறது. கொஞ்சம் கவனத்துடன் வண்டியைச் செலுத்த வேண்டும். எகிப்து மம்மிகள் போல் முற்றும் மூடிய ரெயின்கோட் அணிய வேண்டும். நிறைய பொறுமை வேண்டும். புஷ்டியான தேகம் வேண்டும். அவ்வளவு தான். இப்போது நீங்கள் சென்னை மழைச் சுற்றுலாவிற்கு ரெடி. நீங்கள் என்னைப்போல் இல்லாமல் எலும்பும் தோலுமாக இருந்தால், கிளம்பாதீர்கள். சென்னை சாலைகளின் மேடு பள்ளங்களில் உருண்டு பிரண்டு எழுந்து வருகிற பயிற்சி இது. திரும்பும் வரையில் திடகாத்திரமாகத் தாக்குப்பிடிப்பது அவசியம்.

சென்னை மழையில் வண்டி (two-wheeler) ஓட்டுவதற்குக் கொஞ்சம் ஆபத்தான சாலைகளில் அண்ணாசாலை முக்கியமானது. வழவழவென்று தார் போட்டிருப்பதால், வண்டி அருமையாக வழுக்கும். எப்போதும் மழை கொட்டிக்கொண்டே இருப்பதால், எல்லோரும் கண்களை மூடியபடி தான் வருவார்கள். ஆட்டோக்களுக்கு ‘சடன் பிரேக்’ அவார்டு கொடுக்கலாம். உங்கள் வண்டியின் பிரேக்குகளைத் தீட்டி வைத்துக் கொள்வது அவசியம். முன்னால் செல்பவர்களுக்கு முன்னால் செல்பவர்களுக்கு முன்னால் இருக்கிற வண்டியில் சிகப்பு விளக்கு தெரிந்தவுடன் பிரேக்கைப் பிடிக்க வேண்டும். இது முக்கியமானது. உங்களின் reflex reaction நேரத்தைப் பரிசோதிக்கும் பயிற்சி இது. சென்னையில் சாதாரண காலங்களிலும் இது அவசியம் என்றாலும், மழைக் காலங்களில் இது வீர விளையாட்டாகக் கொண்டாடப்படுகிறது.

ஆனாலும் ஆபத்துகளைத் தாண்டி நம் கவனத்தைக் கவருகிறவர்கள், சின்னச் சின்ன பள்ளிக் குழந்தைகள். அவர்களுக்காகவே சின்னஞ்சிறிய வடிவத்தில் செய்யப்பட்ட ‘மிக்கி மவுஸ்’ ரெயின்கோட்டுகளை அணிந்து, வண்டிகளின் பின்னால், தன் தாய் அல்லது தந்தையைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வருகிற குழந்தைகள் – கவிதைகள். இன்னும் தன் அம்மாவின் கைவிரல்களைப் பற்றிக்கொண்டு, தலையில் குடை போன்ற தொப்பிகளை அணிந்து கொண்டு, பள்ளிச் சீருடையில் பவனி வரும் குட்டிகள் மேலும் அழகு. அவர்கள் ரோட்டில் தேங்கி நிற்கும் தண்ணீரில் ‘ச்சபக் ச்சபக்’ என்று குதித்து பின்னால் வருகிற அம்மாவை டென்ஷன் ஆக்குவது அழகோ அழகு!

சென்னை மழையில் தான் எத்தனை அழகு!

எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிற A/c-க்குக் கொஞ்சம் விடுமுறை. சென்னை வீடுகளில் எங்கோ முடங்கிக் கிடந்த கம்பளிகளுக்குக் கொஞ்சம் கவனிப்பு, போட்டி. எப்போதும் சுமை சுமையாகப் புத்தகங்களைத் தூக்குகிறப் பிஞ்சுகளுக்குக் கொஞ்சம் லீவ். வீட்டில் அமைதியாக மெகா சீரியல் பார்த்து அழுகிற அம்மாக்க
ுக்குக் அழுவதற்கு வேறு கொஞ்சம் சுவாரஸ்யமான காரணங்கள். மழைக்கு வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றவர்களின் செல்பேசிகளுக்குக் கொஞ்சம் ஓவர்டைம். நீர் தேங்கி நிற்கும் சாலைகளால், மாநகராட்சிக்குக் கொஞ்சம் கெடுபிடி. கூரை வீடுகளில் வாழ்கிறவர்களுக்குக் கொஞ்சம் ஒழுகல். மருத்துவர்களிடத்தில் கொஞ்சம் அதிகமாகவே கூட்டம். மருந்துக் கடைகளுக்குக் கொஞ்சம் கொண்டாட்டம்.

இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக நிறைய சுவாரஸ்யங்கள். சென்னையில் அழகான மழை!

Published by

Deepak Venkatesan

Deepak is an engineer from Bangalore.

10 thoughts on “சென்னை மழைச் சுற்றுலா”

  1. வாங்க வாங்க!

    தனி வீட்டில் சந்திப்பது சந்தோஷமாகத்தானிருக்கிறது. 🙂

    சென்னையில் மழையை அழகாகக் காட்டி காதில புகை வர வச்சுட்டீங்க. 😉

    நம்ம ஊரை இப்படிப் புகைப்படங்களோட காட்டி எழுதுற ஆளுக்காகத்தான் காத்திருந்தேன். சந்தோஷமா இருக்கு. விட்டிராம தொடர்ந்து எழுதுங்க. 😉

    வரவேற்புடன்,
    மதி

    Like

  2. ஒரு விஷயம்.

    தமிழ்மணத்தில் இணைத்துக்கொள்ளுங்களேன். எல்லோரும் வாசிக்க முடியும்.

    பதிவு டூல்பாரையும் மறக்காதீங்க. 😉

    Like

  3. அப்புறம், நான் wordpress பயன்படுத்துவதால், பதிவு டூல்பார் நிறுவ முடியவில்லை.

    Like

  4. என்னப்பா மெட்ராஸ் மழைனு சொல்லிட்டு பாம்பே படத்தை போட்டுட்ட. மெட்ராசுல எங்க கருப்பு ஆட்டோ ஓடுது?

    இருந்தாலும் பதிவு சூப்பர்..

    பெங்களூரில இப்ப இருக்கரதால 9 மணி நேர மழையை மிஸ் பண்ணிட்டேன். 😦

    Like

  5. நன்றி ரவி. 🙂 இந்த டெம்ப்ளேட் எனக்கு பிடித்திருகிறது. அதனால் தான் வைத்திருக்கிறேன்.

    Like

  6. கிஷோர்… ஹி…ஹி… கண்டுபிடித்து விட்டீர்களே! மழையில் கேமிரா எடுத்துச்சென்று படம் பிடிக்க முடியவில்லை. அதனால் தான் மாற்று ஏற்பாடு செய்து கொண்டேன். 🙂

    Like

Leave a comment