ஒகேனக்கல் – ஒரு இனிய அனுபவம்


கன்னடத்தில் “ஹொகே” என்பது புகை. உயரமான அருவியிலிருந்துப் பொழிகிற தண்ணீர் நம் மீது புகை போல் படர்ந்து, நம் நிழற்படக் கருவியையும் ஒரு கை பார்க்கிற போது தான் இந்தப் புகையின் தாக்கம் நமக்கு நன்றாகப் புலனாகிறது. ‘ஒகேனக்கல்’ என்பது ‘புகைக்கிற கல்’ என்று சொல்லலாம். கன்னடம், தமிழ் என்று இரண்டு கலாச்சாரங்களில் கலந்த என் போன்ற, ரஜினிகாந்த் போன்றவர்களை அவ்வப்போது தர்ம சங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளிவிடுகிற இந்த ஒகேனக்கல்லில் அப்படி என்னத்தான் இருக்கிறது என்று பார்க்கலாம் என்று புறப்பட்டோம்.

அய்யனார் சிலை
அய்யனார் சிலை

என்னுடைய Hyundai Santro நீண்ட பயணத்திற்குத் தயாராகிவிட்டது. நாங்கள் இதற்கு முன்னால் மேற்கொண்ட பயணங்களோடு ஒப்பிடும் போது இது மிகவும் சிறிய பயணம் தான் என்றாலும், போவது ஒகேனக்கல் என்பதால் எங்களுக்குள் மிகுந்த எதிர்பார்ப்புகள், கொஞ்சம் நடுக்கம் கூட 🙂 நான், ஹேமந்த், ஸ்ரீகாந்த், ஜிபி, மன்மோகன் என்று எங்கள் ஐவர் குழு. காலை 7 மணிக்கு, பணஷங்கரியில் மூக்குப் பிடிக்க நாஷ்தா பண்ணிக்கொண்டு (ஹிஹி… பெங்களூர் கன்னடம் எட்டிப் பார்க்கிறது) பெங்களூரிலிருந்து புறப்பட்டோம்.

இணையத்தில் நிறைய ஆரய்ச்சிகள் செய்து, ஒரு வழியாக, ஒரு வழியைத் தேர்ந்தெடுத்திருந்தோம். ஓசூர் வரை சென்று, அங்கு சந்திரசூடேசுவரர் ஆலயத்தைத் தாண்டி, மேம்பாலத்தைக் கடந்ததும், வலப்பக்கம் திரும்பி, இராயக்கோட்டை நோக்கிச் சென்றோம். அங்கிருந்து பாலக்கோடு – பென்னாகரம் – ஒகேனக்கல். வழியில் பென்னாகரத்தில் தான் முறுக்கு மீசையும், வீச்சரிவாளுமாக வீற்றிருக்கும் ஐயனார் சாமி சிலைகளை முதல் முறையாகக் கண்டேன். காவல் தெய்வமான ஐயனாருக்குக் காவலாகச் சில காக்கிச்சட்டைக் காவலர்களின் சிலைகளையும் அங்கே கண்டது நகைப்பாக இருந்தது. இது தான் சமயம் என்று, புதிதாக நான் வாங்கிய SLR Camera-வுக்கு நன்றாக வேலை கொடுத்தேன். அப்படியே கிராமச் சூழலை இரசித்துக்கொண்டே ஒரு வழியாக, ஒகேனக்கல் வந்து சேர்ந்தோம்.

பரிசல்
பரிசல்

வரும் வழியில் இன்னும் ஒரு தமாஷ்! தேநீர் அருந்துவதற்காக ஒரு சிறிய கடையில் நிறுத்தினோம். என்னுடன் இருந்த ஹேமந்த் என்ற நண்பர் கன்னடிகர் என்பதால், அந்தக் கடக்குச் சென்று மூன்று கப் தேநீர் வேண்டும் என்று சொல்வதற்காக, “மூரு மூரு” என்று சொல்லியிருக்கிறார். (கன்னடத்தில் ‘மூரு’ என்பது மூன்றைக் குறிக்கும்). அதற்கு அந்தக் கடைக்காரம்மா, “இங்க மோர் எல்லாம் கிடைக்காது சார்” என்று சொல்ல, நானும் என் தமிழ் நண்பர் ஸ்ரீகாந்தும் சடார் என்று சிரித்தது மறக்க முடியாது.

ஒகேனக்கல்லில் நாங்கள் காலடி எடுத்து வைத்தவுடன்,

பரிசல்காரர்
பரிசல்காரர்

அல்ல அல்ல, காரை விட்டு இறங்கும் முன்பாகவே, பரிசல்காரர் ஒருவர் எங்களைச் சூழ்ந்துகொண்டார். “ஒகேனக்கல்லில் செய்வதற்கு இருக்கிற ஒரே வேலை, பரிசலில் சென்று பார்ப்பது, மசாஜ் எடுத்துக் கொள்வது – இந்த இரண்டும் தான் சார்”, என்று சொல்லிக்கொண்டு எங்களுடனேயே வந்தார். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், ஒருவர் எங்களை அணுகிய உடனேயே, வேறு எவரும் எங்களை அணுகாமல் விலகிச் சென்று விட்டனர். இது இவர்களுக்குள் இருக்கும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று நினைக்கிறேன். அல்லது, வருகிற வருவாய் பகிர்ந்து கொள்ளப்படுவதாகக் கூட இருக்கலாம் – எனக்குத் தெரியவில்லை, விசாரிக்கவும் மறந்துவிட்டேன். பரிசலில் சென்று ஒகேனக்கல் அருவிகளைச் சுற்றிப் பார்ப்பதற்குச் சிறிது நேரம் அந்தப் பரிசல்காரருடன் பேரம் செய்தோம். இறுதியில், ஆளுக்கு 250 ரூபாய் என்று முடிவு செய்து, பரிசலில் ஏறினோம்.

பரிசல் பார்ப்பதற்கு மிகவும் இலகுவாக இருந்தது. இந்தப் பரிசல்காரர்கள் அதை ‘அலாக்’காக தூக்கிக்கொண்டு நடப்பது சுவாரசியமாக இருந்தது. அநதப் பரிசல் என் போன்ற பெருத்த உருவத்தைத் தாங்குமா என்ற அச்சம் எனக்கு இருந்தது. ஆனால் என்னைச் சரியாக நடுவில் உட்கார்த்திவிட்டு,

சுற்றும் பரிசல்
சுற்றும் பரிசல்

மற்ற நால்வரையும் விளிம்புகளில் அமரச் செய்தார் அந்தப் பரிசல்காரர். இதனால், நேர்த்தியாக மிதந்து, எங்களை அழகாகச் சுமந்து, பயணத்தைத் தொடங்கியது எங்கள் பரிசல்.

ஒகேனக்கல் பாறைகள் நிறைந்த பகுதி என்பதால், நீரின் ஆழம் எல்லா இடங்களிலும் சரிசமமாக இருப்பதில்லை. சில இடங்களில் ஒரு அடிக்கும் குறைவாகவும், பல இடங்களில், 40-50 அடி ஆழத்திற்கும் நீர் இருக்கிறது. இதனால், ஆங்காங்கே பரிசலில் இருந்து இறங்கி பயணிகள் நடப்பதும், பரிசல்காரர் பரிசலைத் தூக்கிக் கொண்டு நடப்பதும், இது போன்ற இடங்களில் makeshift கடைகள் தின்பண்ட வகைகளை விற்பதும் ஒகேனக்கல்லில் வாடிககையான ஒன்று. இது போன்ற ஆழமில்லாத இடங்களில் பார்ப்பதற்கு சில நல்ல காட்சியிடங்கள் இருப்பதால் இன்னும் சிறப்பாக இருக்கிறது. நங்களும் பரிசலில் இருந்து

காத்திருப்பு
காத்திருப்பு

இறங்கி, முதல் சிற்றருவியைப் பார்த்தோம்.

நீரின் வேகம் எங்களை நிலைகுலையச் செய்யும் அளவுக்கு இருந்தது. ஒரு நிமிடம் ஆடிப்போக வேண்டியதுதான். கர்நாடகத்தின் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து திறந்துவிடப் படும் நீர் வெள்ளமெனப் பாய்ந்து வந்து, தமிழகத்தின் சமப்பரப்பான நிலங்களில் கலப்பதற்காக மலையிலிருந்து மடவுக்குப் பாய்கிற இடம் தான் ஒகேனக்கல். அப்படிப் பாய்கிற நீரின் வேகத்தை அங்கே பார்க்கிற போது தான் காவிரியின் பரப்பளவு என்ன என்பது புலனாகிறது. Water gushing rapidly into the gorges of Tamilnadu is a sight to watch and cherish. கணக்கற்ற நிழற்படக் கருவிகள் அங்கே ‘க்ளிக்’கி, நீரின் வேகத்தை – வேகத்தின் நிழலைத் தமக்குள் பதிந்து கொள்கின்றன – பயண நினைவுகளுக்காக! மேலும், ஒகேனக்கல்லின் பரப்பு முழுவதையும் பார்ப்பதற்காக அங்கு ஒரு பார்வை கோபுரம் (watch tower) அமைத்திருக்கிறார்கள். அங்கிருந்து பார்ப்பது பிரமிப்பாக இருந்தது.

மீன் வறுவல்
மீன் வறுவல்

இந்த stop முடிந்து மீண்டும் பரிசலில் ஏறிக் கொண்டோம். இம்முறை, பரிசல்காரர் பரிசலை 360 டிகிரி சுழற்றியது தான் சிறப்பம்சம். அவர் சுழற்றியதில் நாங்கள் எல்லாம் தலை சுற்றிப் போனோம். இன்னும், பரிசலைச் சில சிற்றருவிகளின் கீழ் கொண்டு சென்று எங்களை நனையச் செய்தார். இவை எல்லாம் எல்லா பரிசல்காரர்களும் செய்தார்கள். பின் ஒரு மணல் திட்டில் எங்களை இறக்கிவிட்டார். அந்த மணல் திட்டு தான் கர்நாடகா-தமிழ்நாடு அரசுகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருகிறது – the disputed area – என்று சொன்னார். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில், ஒரு மின் உற்பத்தி தொழிற்சாலை அமைக்கும் அளவுக்கு அத்திட்டு பெரிதாக இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதை பற்றி எல்லாம் கவலைப் படாமல், நாங்கள் எங்கள் வேலையைப் பார்க்கத்

காவிரி
காவிரி

தொடங்கினோம். இந்த மணல் திட்டின் சிறப்பம்சம் (highlight), வறுத்த மீன்கள். ஒகேனக்கல்லுக்கே இது ஒரு சிறப்பம்சம் என்று கூடச் சொல்லலாம். எங்கு பார்த்தாலும் மீன் வறுவலின் வாசம் மூக்கைத் துளைக்கிறது. நானும் எனது அசைவ நண்பர்களும் மீன் வறுவலை ஒரு பதம் பார்த்தோம். மற்றவர்கள் சிப்ஸ் மட்டும் தின்று மனநிறைவடைய வேண்டியிருந்தது பாவ்ம் 🙂

இவ்விடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். என் நண்பர்கள் எல்லோரும் நீரில் நீந்தி – விளையாடிக் கொண்டிருக்க, நான் கரையில் நின்றுகொண்டு மீன் தின்றுகொன்டிருந்தேன் (ஹிஹி… வழக்கம் போல…). அவர்களில், நண்பர் ஜிபிக்கு நீச்சல் தெரியாது. காலடியில் இருந்த மணலில் நன்றாக ஊன்றிக்கொண்டு, நீரில் விளையாடிக் கொண்டிருந்தவர், திடீரென்று கால் வழுக்கி, நீரில் மூழ்கத் தொடங்கினார். காலடியில் இருந்து மணல் சரியத் தொடங்கியதாலும், நீரில் current அதிகமாக இருந்ததாலும், அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஒரு வழியாக, ஹேமந்துக்கு நீச்சல் தெரியுமென்பதால், அவரை இழுத்துக் கரை சேர்த்தார். நாங்களெல்லாம் ஒரு நிமிடம் அதிர்ந்து விட்டது அப்போதுதான். அதனால், ஒகேனக்கல்லில் நீரில் விளயாடும் போது, எச்சரிக்கை மிகவும் முக்கியம்.

பாய்ச்சல்
பாய்ச்சல்

இந்த இடத்தை முடித்து கொண்டு மீண்டும் பரிசலில் ஏறி, ம்றுகரையில் இருந்த பாறைகளுக்குச் சென்றோம். இந்தப் பாறைகளின் இடுக்கில் நீர் மிகவேகமாகப் பாய்வது, குளிப்பதற்கு மிகவும் நன்றாக இருந்தது. நான் முதலில் குறிப்பிட்டது போல, இங்கும் வேகம் மிக அதிகமாக இருந்தது. நாங்கள் பாறை இடுக்குகளில் ஊன்றிக்கொண்டு குளித்தோம். ஸ்ரீகாந்த் மட்டும் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டார். நாங்கள் எல்லாம் தண்ணீரின் மசாஜ்ஜையே தாங்கமுடியாமல் திணறியபடி மகிழ்ந்தோம். 2 ம்ணி நேரம், நீரில் விளையாடிக் களைத்து, பின் மீண்டும் பரிசலில் ஏறிக் கொண்டோம்.

இது தான் இறுதிப் பயணமாக இருந்தது. ஒகேனக்கல்லின் கர்நாடக எல்லையில் ஒரு மலை இடுக்கில் நீர் பீய்ச்சாடித்துக்கொண்டு பாய்கிற கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்க மக்கள் எல்லோரும் அலைமோதிக் கொண்டிருந்தனர். முன்னர் சொன்ன வேகத்தைத் தூக்கிச் சாப்பிடுகிற அசுரப் பாய்ச்சல் இது. சிக்கினால் சின்னாபின்னமாக்கி விடுகிற இராட்சதப் பாய்ச்சல். அரண்டு

ஐவர் குழு
ஐவர் குழு

போகிற அளவுக்கு ஆர்ப்பரித்துப் பாய்ந்துகொண்டிருந்தது காவிரி. இது தான் பயணத்தின் கிளைமாக்ஸாக இருந்தது. பயணம் முடிந்து திரும்பிச் சென்று நண்பர்கள், உற்றாரிடம் வருணிக்க வேண்டும் என்றால், அந்த பாய்ச்சலையும், வேகத்தையும், அசுரத்தனத்தையும் அளந்து விவரிக்க வார்த்தைகள் கிடைக்காது என்பதால், நிழற்படக் கருவிகள் இறுதியாக ‘க்ளிக்’கிக் கொண்டன. பயணத்தை இனிதே முடித்த திருப்தியும் எங்களைச் சூழ்ந்து கொண்டது.

திரும்புகிற போது, இன்னும் ஒரு பொட்டலம் நிறைய மீன் வறுவல் வாங்கிக் கொண்டோம். ஒரு மாறுதலுக்காக, தர்மபுரி – கிருஷ்ணகிரி வழியாகவே பெங்களூர் திரும்பலாம் என்று திரும்பிய எங்களின் பொறுமையை மிகவும் சோதிப்பதாக அப்பாதை அமைந்துவிட்டது. சாலைப் பழுதுபார்க்கும் – விரிவுபடுத்தும் பணிகள் எல்லா இடங்களிலும் நீக்கமற நடந்துகொண்டிருந்ததால், காரை ஓட்டிய நண்பர் ஸ்ரீகாந்த் களைத்துப் போனார் என்றால், அது குறைவுதான். மீண்டும் பென்னாகரம் – பாலக்கோடு – இராயக்கோட்டை – ஓசூர் பாதையில் செல்வது தான் சிறந்தது என்பது இப்பதிவைப் படிக்கிற அன்பர்களுக்கு நாங்கள் கொடுக்கிற டிப். முழுதும் களைத்து, இரவு 12 மணியளவில் பெங்களூர் வந்து வீட்டில் படுக்கையில் விழுந்ததோடு எங்கள் பயணம் இனிதே முடிந்தது.

Advertisements

Published by

Deepak Venkatesan

Deepak is an engineer from Bangalore.

One thought on “ஒகேனக்கல் – ஒரு இனிய அனுபவம்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s