பறவைகள் பலவிதம்

A stork scene

A stork scene

பெங்களூரிலிருந்து 120 கி.மீ தொலைவில் இருக்கும் அழகான நகரம் மைசூரு. மைசூருக்கு 10 கி.மீ முன்பு வலது புறமாகச் செல்லும் சிறிய சாலையில் இறங்கி, ஒரு 5 கி.மீ அளவுக்குச் சென்றால் கிடைக்கிற இயற்கையின் அற்புதமான படைப்பு தான் ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயம். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதம் முடிய உலகின் பல நாடுகளிலிருந்தும் வரும் விதவிதமான வண்ணமிகு பறவைகளைக் காண சரியான இடம் தான் ரங்கனதிட்டு.

நானும் எனது நண்பர்கள் கார்த்திகேயன், சுப்ரமணியன் – மூவரும் இந்த பறவைகள் சரணாலயத்திற்குச் செல்வது என்று முடிவு செய்தோம். அதிகாலை 6 மணிக்குக் கிளம்புவது சரியாக இருக்கும். பெங்களூரு-மைசூரு சாலை நல்ல அகலமாகவும், மேடு பள்ளங்கள் இன்றி சீராகவும் இருப்பதால், 2 முதல் 2.5 மணி நேரத்தில் 120 கி.மீ தொலைவில் உள்ள ரங்கனதிட்டுவை அடைந்துவிடலாம். நாங்கள் சரியாக 8.30 மணிக்கு இவ்விடத்தை அடைந்தோம். இங்கு காலை வேளையில் செல்வது தான் மிகவும் உசிதம். ஏனென்றால், வெயில் அதிகமாக அதிகமாக, பறவைகள் அவ்வளவாகப் பறக்காமல் தங்கள் மரங்களிலேயே தங்கியிருந்து குஞ்சுகளைப் பாதுகாப்பதில் மும்முரமாக இருக்கும். அதனால், அவற்றைச் சரியாகப் பார்க்க முடியாது. நமக்கும் வெயிலில் சாவகாசமாகப் பார்ப்பது கடினம்.

The painted stork

Painted Stork

ரங்கனதிட்டுவிற்குச் செல்லும் பாதையில் நுழையும் போதே சில வண்ணமயமான Painted Stork எனப்படும் செங்கால் நாரைகள் வானில் பறந்து போவதைப் பார்த்தேன். அது ஒரு கண்கொள்ளாக் காட்சி. இவ்வளவு அழகான பறவைகளை இவ்வளவு கிட்டத்தில் பார்ப்பேன் என்று நான் எண்ணிப்பார்த்ததில்லை. இது மேலும் எனது ஆவலைத் தூண்டியது. போதாக்குறைக்கு, எனது Nikon D80 நிழற்படக் கருவியையும் கையோடு எடுத்துச் சென்றிருந்தேன். மிகுந்த எதிர்பார்ப்புகளோடு சென்ற எங்களை நுழைவு வாயிலில் நிறுத்தினார்கள். காலை 9 மணிக்கு தான் சரணாலயத்திற்குள் செல்ல அனுபதிப்பார்களாம். நாங்கள் ஏமாற்றத்தோடு காத்திருந்த போது, ஒரு 5-10 நிமிடங்கள் கழித்து அங்கு இருந்ந்த அலுவலர் எங்களை உள்ளே அனுமதித்தார். காரில் சென்றதால், ஏறத்தாழ 100-150 ரூபாய் நுழைவுக் கட்டணம் கொடுத்ததாக நினைவு.உள்ளே வாகனங்களை நிறுத்துவதற்கு நல்ல பரவலான இடம் ஒதுக்கியிருக்கிறார்கள். ரங்கனதிட்டு சரணாலயமானது காவிரி நதியின் ஒரு பகுதியாக அமைந்திருப்பதால், இவ்விடம் காவிரிக் கரையில் ஒரு அழகான பூங்கா போல் அமைக்கப்பட்டுள்ளது. சின்ன குளம், மீன்கள், ஏராளமான மரம் – செடிகொடிகள் என ரம்யமாக

The Eurasian Spoonbill-2

Eurasian Spoonbill

இருக்கிறது. சிறிய தொலைவே நடப்பதற்குள் காவிரியாற்றை அடைந்துவிடுகிறோம். அதன் பின் காணும் காட்சிகளை வருணிக்க வார்த்தைகளைத் தேட வேண்டியிருக்கும்.

அத்ற்கு முன் இன்னபிற logistics பற்றிச் சொல்லிவிடுகிறேன். இந்த சரணாலயத்தில் பறவைகளைப் பார்த்து மகிழ சரியான உத்தி, அங்கிருக்கும் படகில் சென்று பார்ப்பதுதான். படகிற்கு, அரை மணி நேரத்திற்கு 250 ரூபாய் வசூலிக்கிறார்கள். 1 மணி நேரம் என்றால் 500 ரூபாய். நீங்கள் தனியாக ஒரு படகினை அமர்த்திக்கொள்ளலாம், அல்லது, அங்கு வந்திருக்கும் மற்ற பயணிகளோடு சேர்ந்து ஒரு படகில் பயணம் செய்யலாம். ஒரு படகில் 8 பேர் செல்லலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் தனியாக ஒரு படகினை அமர்த்திக்கொண்டு பயணத்தைத் தொடங்கினோம்.

ரங்கனதிட்டுவில் ஒரு அற்புதம் என்னவென்றால், மரக்கிளைகளில் அமர்ந்திருக்கும் இந்தப் பறவைகளை அம்மரங்களின் அருகிலேயே சென்று மிக நன்றாகக் கண்டு களிக்கலாம். இப்பறவைகளும், மனிதர்க்ள் அங்கு வந்து செல்வதற்குப் பழகிப்போயிருப்பதால், நம்மை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. தாம் உண்டு, தம் குஞ்சுகளுண்டு என்று இருக்கின்றன. இதனால், மிக அண்மையில் பார்த்து, சிறப்பான நிழற்படங்கள் எடுப்பதற்கு மிக ஏதுவாக இருக்கிறது. ஒரு விடயத்தில் கவனம் தேவை. இங்கே நீரில் முதலைகள் உண்டு. அதனால், எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இங்கு நீரில் முதலைகள் இருப்பதால், குரங்கு, நரி போன்ற மற்ற மிருகங்கள் எவையும் நீருக்குள் இறங்குவதில்லை. பறவைகளும் நீரின் நடுவே இருக்கிற மரங்களில் மட்டுமே கூடுகளைக் கட்டுகின்றன.

The river tern - landing

River tern landing

இம்முதலைகள் இவ்வகையில் பறவைகளைப் பாதுகாக்கின்றன. பறவைகளின் முட்டைகளோ குஞ்சுகளோ தவறுதலாக ஆற்றில் விழும் போது முதலைகள் அவற்றை இரையாக்கிக் கொள்கின்றன.

மற்ற சமயங்களில் மீன்கள் இவற்றிற்கு இருக்கவே இருக்கிறதே. எனவே, இவ்விடம் பறவைகளுக்கு இயற்கையான பாதுகாப்பிடமாக பல மில்லியன் ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பது நிதர்சனமாகிறது.

நம்மூரில் குளிர்காலம் தொடங்கும் நவம்பர்-டிசம்பர் மாதங்களில், ஆஸ்திரேலியா, சைபீரியா போன்ற பல ஆயிரம் கி.மீ-களுக்கு அப்பாலிருக்கும் நாடுகளிலிருந்து இப்பறவைகள் இந்தியாவிற்கு ஆகாய மார்க்கமாக வருகின்றன. இனச்சேர்க்கை முடிந்து, முட்டைகள் இட்டு, குஞ்சுகள் பொரித்து, அவை வளர்ந்து பெரிதாகி அவையும் பறப்பதற்குத் தயாராகும் தருணம் வரை இவை இங்கேயே தங்கியிருக்கின்றன. பின்னால், வெயில் காலம் தொடங்கும் மார்ச்சு-ஏப்ரல் மாதங்களில், ஒவ்வொரு பறவைக் குடும்பங்களாக, தத்தமது குஞ்சுகளோடு தமது நாட்டிற்குச் சென்று விடுகின்றன. மீண்டும் அடுத்த குளிர்காலம் தொடங்கும் போது திரும்புகின்றன. இந்த cycle, பல மில்லியன் ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

The dark couple

Cormorants

அதிகப் பரவலாக இங்கு காணப்படும் பறவைகள் – நாரை வகைகள். இவை தான் பல்வேறு வண்ணங்களில் நம் கண்களுக்குப் பளிச்சென்று புலப்படுகின்றன. குறிப்பாக, செங்கால் நாரைகள் (Painted Storks). அழகான ஆரஞ்சு நிறத்தில் நீளமான அலகுகளை உடைய இவை, சாதாரணமாக சாம்பல் நிறத்தில் இருக்கும். இனச்சேர்க்கை சமயங்களில், கருப்பு – சிகப்பு என்று பல வண்ணங்களில் இறகுகளை வளர்த்துக் கொண்டு அட்டகாசமாகக் காட்சியளிக்கின்றன. இவை தான் ரங்கனதிட்டுவின் ‘highlight’ என்று சொல்லலாம்.

அதன் பிறகு, பிளவு பட்டது போன்ற அலகினையுடைய ‘Openbilled Storks‘ எனப்படும் நத்தை கொத்தி நாரைகள். இவற்றின் அலகுகள் சேராமல் இருந்து, முனையில் மட்டும் சேர்கின்றன. மற்றொரு interesting-ஆன நாரையினம், ‘Spoonbilled Storks‘ எனப்படும் கரண்டி மூக்கு நாரைகள். நன்கு தட்டி வைத்தது போன்று அகலமான, தட்டையான, தோசைக் கரண்டி போன்ற அல்குகள் கொண்டிருக்கின்றன. இவ்வலகுகள், இவற்றிற்கு மீன்களை எளிதில் பிடிக்க உதவுகிறன. ஒரு கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், இந்த கரண்டி மூக்கு நாரைகள் மார்ச்சு மாதத்தோடு தங்களின் நாடுகளுக்குத் திரும்பிவிடுகின்றன. எனவே, இவற்றைக் காண மார்ச்சுக்கு முன்பு போகவேண்டும்.

A bunch of lotuses

Lotus Pond

இந்த நாரையினங்கள் எல்லாம், தண்ணீரில் நீண்ட நேரம் நின்று நீர் அருந்திக் கொண்டிருப்பது போல் தோன்றுகின்றன, எனினும், உண்மையில், இவை தமது அலகுகளில் நீரினைச் சேகரித்துக் கொண்டு, பின் பறந்து சென்று, மரங்களில் இருக்கும் தமது குஞ்சுகளை நீர் அருந்தச் செய்கின்றன. இன்னொரு பார்ப்பத்ற்கரிய காட்சி, ‘Pelican‘ எனப்படும் கூழைக்கடாக்கள். இப்பறவைகள், நீரின் பரப்பிற்கு சற்று மேலே பறந்தவாறே சென்று, சட்டென்று த்மது தலையை நீருக்குள் விட்டு மீன்களைப் பிடித்துவிடுகின்றன. கூழைக்கடாக்களுக்கு அலகின் அடிப்பாகத்தில் ஒரு பை போன்ற அமைப்பு இருக்கிறது. இதில் மீன்களைச் சேகரித்துக் கொண்டு, தம் குஞ்சுகளுக்குச் சென்று அவற்றை ஊட்டுகின்றன. இவை பறந்து சென்றவாறே மீன் பிடிக்கும் அழகே அழகு.

Night heron in penance

Night Heron in Penance

மேலும், ரங்கனதிட்டுவில் காணப்படும் பறவைகள், சிறிய உடலமைப்பினை உடைய ‘Night Heron‘ எனப்படும் வக்கா. இது இரவில் மட்டுமே இரைதேடும் ஒரு அரிய பறவை. இவற்றை மிகுதியாக சென்னை அருகே உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் காணலாம். இன்னும், ‘Little Egret‘ எனப்படும் சின்ன வெள்ளைக் கொக்குகள், ‘Cattle Egret‘ எனப்படும் உண்ணிக் கொக்குகள், ‘Median Egret‘ எனப்படும் வெள்ளைக் கொக்குகள், ‘Indian River Tern‘ எனப்படும் குளத்து ஆலா, ‘Little Cormorant‘ எனப்படும் நீர் காகம், ‘Swallow‘ எனப்படும் தலை இல்லாத குருவி, ‘Darter‘ எனப்படும் பாம்புத்தாரா, ‘White Ibis‘ எனப்படும் வெள்ளை அரிவாள் மூக்கன், ‘Partridge‘ எனப்படும் கௌதாரி, என்று சொல்லிக்கொண்டே போகலாம். இன்னும் இவ்விடத்திலேயே indigenous-ஆகக் காணப்படும் பறவைகளும் உண்டு. மயில், புறா, ஆந்தை போன்ற பறவைகளும் பார்க்க முடிந்தது.

குறிப்பிட்டுச் சொல்லும் படியான பறவை – குளத்து ஆலா. இது அங்கிருக்கும் பாறைகள் மீது தான் முட்டையிடுகிறது. ஆனால், முதலைகள் இவற்றை நெருங்குவதில்லை. ஏனென்றால், இவை முதலைகளின் கண்களைக் கொத்திவிடுமாம். என்னே தற்காப்பு!

The Asian Open billed Stork

Openbilled Stork

இவை நாரைகளை விடச் சற்று தாமதமாக முட்டையிடுகின்றன. ஏனென்றால், கோடைக் காலம் ஆரம்பமாகும் போது ஆற்றில் நீர் குறைந்து பாறைகள் மூழ்காமல் நல்ல பரவலாக இருக்கும் போது தான் இவை அப்பாறைகளின் மீது முட்டையிட முடிகிறது.

மழை ஆரம்பமாவதற்குள் தமது குஞ்சுகளைப் பயிற்றுவித்து அழைத்துச் சென்றுவிடுகின்றன.

இயற்கையின் படைப்பில் எத்தனை விந்தைகள்!

இந்த பலதரப்பட்ட பறவைகளையும் நிதானமாக 1 மணி நேரம் பார்த்து ரசித்து, நிழற்படங்கள் நிறைய எடுத்துக் கொண்டு கிளம்பினோம். மீண்டும் அடுத்த வருடம் வரவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டோம். அடுத்து வருகிற ஜூன் – ஜூலை மாதங்களில், மழைக் காலத்தில் இனச்சேர்க்கை கொள்ளும் வெள்ளை அரிவாள் மூக்கன்களை (White Ibis) நிறைய பார்க்கலாம். இவை மழைக்காகவே இங்கு வருகின்றனவாம். இவ்விடயங்களையெல்லாம் எங்களுக்கு விளக்கமாக எடுத்துச் சொன்ன எங்களின் படகினைச் செலுத்தி வந்த அன்பருக்கு மிக்க நன்றிகள்.

Advertisements
Post a comment or leave a trackback: Trackback URL.

Comments

  • Ashwin  On May 12, 2009 at 1:59 pm

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள் தீபக். வாழ்த்துகள்!

  • மிக்க நன்றி அஷ்வின்… 🙂

  • ramesh  On January 17, 2012 at 8:39 pm

    நன்றாக எழுதியிருக்கிறீர்கள் . வாழ்த்துகள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: